லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ரோஹித் ஷர்மா, புஜாரா ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா அரை சதம் கடந்துள்ளார். இந்த தொடரில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதம் கடந்துள்ளார் ரோஹித் ஷர்மா. அதுமட்டுமின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார். 


முன்னதாக இன்றைய நாள் ஆட்டத்தில், 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என மொத்தம் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆண்டர்சன் பந்துவீச்சில் ராகுல் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, ரோஹித்தோடு சேர்ந்து விளையாடி வருகிறார். 






முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்று 290 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான இன்று, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில், உணவு இடைவெளிக்கு பிறகு 30 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 


ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.


இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Also Read: Tokyo Paralympics: பாரா பேட்மிண்டனில் மனோஜ் சர்கார்க்கு வெண்கலம்... இந்தியாவுக்கு 17வது பதக்கம்!