டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியிருந்தனர். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்- பாலக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மனோஜ் சர்கார் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியை அவர் வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். ஆடவர் எஸ்.எல் 3 பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் மனோஜ் சர்கார் ஜப்பான் வீரர் ஃபூஜிஹாராவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் 22-20 என்ற புள்ளிக்கணக்கில் மனோஜ் கைப்பற்றினார். மிகவும் சவாலான எதிரணி வீரர் ஃபுஜிஹாரா, கடைசி வரை இந்த கேமை வென்றிட போராடினார். அடுத்த கேமை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி கேமை வென்றார். இதனால், இரண்டு கேம்களையும் கைப்பற்றி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்தியாவுக்கு இது 17-வது பதக்கமாகும்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுஹேஷ் யேத்தி ராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுஹேஷ் யேத்திராஜ் 11 நிமிடங்களில் முதல் கேமை 21-9 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் தொடக்கத்தில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். எனினும் இரண்டாவது கேமை 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாரா பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அவர் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரான்சு வீரர் லூகாஸை எதிர்த்து விளையாட உள்ளார்.
அதேபோல் ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு பாரா பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் வீரர் கூம்ப்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு கேம்களை கைப்பற்றி போட்டியை வென்றார். இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இவரும் நாளை காலை நடைபெற இறுதிப் போட்டியில் ஹாங்காங் சீன வீரர் சூ மான் கியை எதிர்த்து விளையாட உள்ளார்.
மேலும் படிக்க: ‛புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ இங்கிலாந்து இம்சை அரசன் ‛ஜார்வோ’ கைது!