இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இதில், இந்தியாவில் 60 டெஸ்ட் போட்டிகளும், இங்கிலாந்தில் 62 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 26 டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 47 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 49 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.


இந்த போட்டிகளில் இந்தியாவில் மட்டும் 60 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், இந்திய அணியினர் மட்டும் 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியினர் 13 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்தில் 62 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 7 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 34 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 21 போட்டிகள் டிராவில் நிறைவடைந்துள்ளது.




அதிகபட்சமாக இந்தியாவில் 15 தொடர்கள் நடைபெற்றுள்ளது. அதில் 7 தொடர்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 5 தொடர்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 3 தொடர் டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிகபட்சமாக 18 தொடர்கள் நடைபெற்றுள்ளது. அதில், 3 தொடர்களில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 14 தொடர்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 1 தொடர் டிராவில் முடிந்துள்ளது.


இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 2016ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்துள்ளது. 2007ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஓவலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 664 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 710 ரன்களை குவித்துள்ளது. 1984ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் 652 ரன்களை குவித்துள்ளது.


இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் குறைந்தபட்சமாக இந்திய அணி 1974ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற போட்டியில் 42 ரன்களுக்கு சுருண்டது குறைந்தபட்சம் ஆகும். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 1971ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற போட்டியில் 101 ரன்களுக்கு சுருண்டுள்ளது.




இந்தியா- இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதுவரை 222 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. அவற்றில், இந்திய அணி சார்பில் 101 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் 121 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணியின் சார்பில் தனிநபர் அதிகபட்சமாக, 2016-17ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கருண்நாயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலே 303 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 1990ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற போட்டியில் கிரகாம் கூச் 333 ரன்களை குவித்துள்ளார்.


இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 2 ஆயிரத்து 535 ரன்களை 32 போட்டிகளில் குவித்துள்ளார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 431 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 7 சதங்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் அலஸ்டயர் குக் 7 சதங்களை அடித்துள்ளார்.




பந்து வீச்சைப் பொறுத்தவரை ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 1951ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வினுமன்கட் 55 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 1952ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ப்ரெட் ட்ரூமேன் 31 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 1952ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வினு மன்கட் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அதிகபட்சம் ஆகும். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இயான் போத்தம் 1979ம் ஆண்டு 13 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அதிகபட்சம் ஆகும்.




இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பகவத் சந்திரசேகர். அவர் 23 ஆட்டங்களில் ஆடி 95 விக்கெட்டுகுளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் 27 போட்டிகளில் ஆடி 110 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்சமாக இந்தியா சார்பில் சுனில் கவாஸ்கர் 38 போட்டிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் அலஸ்டயர் குக் 30 போட்டிகளில் ஆடியுள்ளார்.