சில திரைப்படங்களை எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும், அந்த படங்களை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கும். காலம் கடந்தும் சில படங்கள் அடுத்த தலைமுறையினரை சென்றடைய முக்கிய காரணம் தொலைக்காட்சிகளே. அந்த வரிசையில், எப்போது ஒளிபரப்பட்டாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசித்து பார்க்கும் திரைப்படம், ‘அன்புள்ள ரஜினிகாந்த்’.


1984-ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு பிறகும், இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நோஸ்டால்ஜிக் கிளப்பியுள்ளார் நடிகை மீனா.



இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தது பற்றியும், அந்த அனுபவங்கள் பற்றி பேசும் போதும் உற்சாகமடையும் மீனா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து வருகிறார். அந்த திரைப்படத்தில், ரஜினி மீனாவுக்கு சாக்குலேட் கொடுப்பது போலவும், அப்போது மீனா முகம் சுளித்து கொண்டு சாக்குலேட்டை துப்புவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தான் நடித்த காட்சிகளிலே, இதுதான் சவாலாக இருந்தது என மீனா பகிர்ந்துள்ளார். ,  நடிகர் நடிகைகளுக்கு ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படம் எவ்வளவு சிறப்போ அதே போல அத்திரைப்பட்டத்தில் வரும் காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களுக்கும் எப்போதும் ஃபேவரைட்.


கடந்த ஆண்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஜினியோடு இருக்கும் குழந்தை பருவ புகைப்படங்களை பகிர்ந்த மீனா, “அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் கழிந்துவிட்டது. இந்நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் மறைந்த தூயவன் அவர்களுக்கும், எந்த நடிகரும் மறுப்பு தெரிவிக்க முடியாத ’ரோஸி’ போன்ற கதாப்பாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனர் நட்ராஜ் அவர்களுக்கு எனது நன்றிகள். அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின்போது எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்த ரஜினி சாருக்கும் நன்றிகள். குறிப்பாக, கடவுள் உள்ளமே பாடல் பாடிய லதா அம்மாவிற்கு சிறப்பு நன்றிகள். நீங்கள் பாட வேண்டும், உங்களது குரலை நான் ‘மிஸ்’ செய்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.






அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்தோடு நடித்துள்ள மீனா, அதனை அடுத்து வீரா, முத்து, எஜமான் உள்ளிட்ட ஹிட் படங்களில் அவருடன் டூயட் பாடினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையில் தோன்றி நடித்து வரும் இந்த காம்போவை, விரைவில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்திலும் ரசிகர்கள் காணலாம். இதில், முக்கியமான கதாப்பாத்திரத்தில் மீனா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பெரிய  திரைப் பட்டாளமே சேர்ந்து நடிக்கும் இத்திரைப்படத்தின் தியேட்டர் வெளியீடுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.