இந்தியாவுக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.


இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாகிப் மஹ்மூத்துக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஜோஸ் பட்லர் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். இதனால், நான்காவது டெஸ்ட் விளையாடுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்தின் 15 பேர் கொண்ட அணியில் பேக்அப் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்தின் சுழற்சி கொள்கை மற்றும் காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




15 பேர் கொண்ட அணியில் கிறிஸ் வோக்ஸ் திரும்பியதற்கு பதிலளித்த இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், "கிறிஸ் வோக்ஸ் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். கடந்த வாரம் அவர் வார்விக்ஷயருக்காக அற்புதமாக பந்துவீசினார். ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.  இந்த கோடையின் தொடக்கத்தில் நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்த சாம் பில்லிங்ஸ் ரிசர்வ் கீப்பராக திரும்பியுள்ளார்.  கிரிக்கெட்டை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். எங்கள் குழுவில் பிரபலமான உறுப்பினரான பில்லிங்ஸ் மற்ற குழுவினருடன் நன்றாகப் பழகுவார்” என்று கூறினார்.


இங்கிலாந்தின் 15 பேர் கொண்ட அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன், ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் வூட் , கிறிஸ் வோக்ஸ்.


 






நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு காயம் பெரிதாக இல்லை என்றாலும், அடுத்தப் போட்டியில் அவர் களமிறக்கப்படமாட்டார் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, ஜடேஜாவுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளார் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.


Kohli in Press Conference: ‘சரி.. நன்றி’ - செய்தியாளரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த விராட் கோலி!