இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 11 ரன்கள் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. 


 






அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் கேப்டன் கோலி ஆகிய இருவரும் நிதனமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புஜாரா வழக்கம் போல் 4 ரன்களுக்கு ஆண்டர்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி  39 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.  இந்த டெஸ்ட் போட்டியில் புஜாராவை அவுட் செய்ததன் மூலம் அவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 முறை ஆண்டர்சென் அவுட் செய்துள்ளார். 


ஆண்டர்செனிற்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயான் புஜாராவை 10 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 7 முறையும் ஹேசல்வூட் 6 முறையும் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து உணவு இடைவேளை வரை இந்திய அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்த முதல் செஷனின் முதல் 30 நிமிடங்கள் இந்தியாவிற்கு நல்ல தொடக்கமாக இருந்தது. 


 






முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 28 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் 11 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட் இழந்து நல்ல வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. ஏற்கெனவே போட்டியின் தொடக்கத்தின் போது இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது தொடர்பாக பெரிய விமர்சனம் எழுந்தது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் சொதப்பியுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்யும் எதிர்பார்க்கப்பட்ட போது முதல் இன்னிங்ஸில் இப்படி சொதப்ப தொடங்கியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஊரே கிளம்பிடுச்சு... அஷ்வினை ஏன் சேர்க்கலை? பதில் சொல்லுப்பா... கோலியை நோக்கி பாயும் கேள்விகள்!