ஜென்டில்மேன். தமிழ்சினிமாவை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றதில் முக்கியப்படம். பிரமாண்ட இயக்குனர் சங்கரின் முதல்படம். இன்றும், என்றும் சலிக்காத உணர்வுபூர்வமான கமர்ஷியல் படம். கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார், சங்கர் இயக்கினார், அர்ஜூன் நடித்தார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்கிற வகையில் அனைவரும் அந்த படத்தை பற்றி அறிந்திருப்பார்கள். இன்னும் அறியப்படாத பல தகவல்கள், ஜென்டில்மேனுக்கு உண்டு. அது என்ன? எவ்வாறு நடந்தது? என்பதை இன்றைய ப்ளாஷ்பேக் பகுதியில் காணலாம்...
டிஸ்கஷனில் வெடித்த லாஜிக் பிரச்சினை!
நீண்டநாள் உதவி இயக்குனராக இருந்த சங்கர், இப்போது இயக்கும் வாய்ப்பை பெறுகிறார். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் அறிவிக்கும் போதே பிரம்மாண்ட படமாக ஜென்டில்மேன் இருக்கும் என்கிறார்கள். ஜென்டில்மேன் படம் துவங்கும் முன்பே, நல்ல உதவி இயக்குனர்களை வைத்துக் கொள்ள சங்கர் விரும்பினார். வசந்தபாலன், காந்தி கிருஷ்ணா உள்ளிட்ட திறமையான இயக்குனர்களை அழைத்துக் கொண்டார். இப்போது கதை டிஸ்கஷன். எழுத்து சித்தர் பாலகுமாரன் தான் வசனங்கள் எழுதுகிறார். ஜூகுனு, குரு படங்களின் கலவை தான் ஜென்டில்மேன் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதில் என்ன மாற்றம் செய்யப்போகிறோம் என்பதில் அவர்களுக்குள் உரையாடல். ‛ஒருத்தன் இருப்பவர்களிடம் திருடி... இல்லாதவர்களிடம் தருகிறான்...’ இது கதை. ‛ஏன் அவன் திருடுகிறான்...?’ என்கிற லாஜிக் கதையில் அப்போது இல்லை. உதவி இயக்குனர் காந்தி கிருஷ்ணாவும், வசந்தபாலனும் டிஸ்கஷனில் இந்த கேள்வியை எழுப்புகின்றனர். ஒருவருக்கொருவர் உடன்பாடில்லை. இறுதியில் நீங்களே அதை தயார் செய்யுங்கள் என முடிவுக்கு வருகிறார்கள். இப்போது காந்தி கிருஷ்ணாவும்-வசந்தபாலனும் பிளாஷ்பேக் காட்சியை உருவாக்க வேண்டும்.
தாலியை மோதிரமாக்கும் சீன் கதையல்ல உண்மை!
அர்ஜூன் ஏன் திருடுகிறார் என்கிற பிளாஷ்பேக் இப்போது ரெடி. ஆனால் அதை ஸ்ட்ராங் ஆக்க வேண்டும். காந்தி கிருஷ்ணாவின் தந்தை இறந்த போது அவர் தான் தந்தைக்கு தகன சடங்குகள் செய்துள்ளார். அவர்கள் வழக்கப்படி, சடங்கு செய்பவருக்கு தாயின் தாலியை உருக்கி மோதிரம் செய்து தர வேண்டும். அவ்வாறே மோதிரம் தரப்பட்டது. அந்த நிஜத்தை ஜென்டில்மேன் பிளாஷ்பேக்கில் சேர்க்கிறார். சீன் உருக்கமாகிறது. இறந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தரப்படும் என்கிற தன்னுடைய அனுபவத்தை வசந்தபாலன் சேர்க்க, பிளாஷ்பேக் வேறு லெவலுக்கு வந்துவிட்டது. இப்போது கதை முழுமையடைந்தது. ‛இது நடந்தது... இதனால் ஹீரோ... திருடி... இது நடக்காமல் தடுக்க நினைக்கிறான்...’ என்கிற முழு வடிவத்தை ஜென்டில்மேன் அடைந்தது.
நடிக்க மறுப்பு: கமல் சொன்ன இரண்டு காரணங்கள்!
ஜென்டில்மேன் கதை துவக்கத்தில் எழுதப்பட்டது கமலுக்காக தான். கதை கமலிடம் சென்றது. கமல் இரண்டு இடங்களை நோட்டமிட்டார். ஒன்று, ‛தான் நடித்த குரு படத்தில் தழுவல்...’ என்பதை கமல் கூறினார். ஒரே கதையில் இரண்டாவது முறை நான் நடிப்பது சரியாக இருக்குமா என்கிற சந்தேகத்தை எழுப்பினார். மற்றொன்று, ‛கதையில் நாயகன் பிராமினாக காட்டப்படுகிறார். ஏற்கனவே பிராமின் என்கிற வளையத்தை தனக்கு சுற்ற சிலர் நினைப்பதால், அதுவும் கமலுக்கு நெருடலாக இருந்தது. கமல் ஜென்டில்மேனை தவிர்க்க, அதுவே காரணமாகவும் இருந்தது. கமல் சொன்னதாலோ என்னவோ... கதைப்படி அதன் பின் சில காட்சிகளை மாற்றியிருந்தனர். ஆனால் கமல் வந்துசேரவில்லை. அவருக்கு பதில் அர்ஜூன் வந்து சேர்ந்தார். ஜென்டில்மேன் ஆனார். கமல் இல்லாத குறையை அர்ஜூன் நீக்கியிருந்தார் என்றே படத்தை பார்த்தவர்கள் பின்னாளில் கூறியிருந்தனர்.
இரண்டாம் பாதியில் உறங்கிய உதவி இயக்குனர்: அப்செட் ஆன சங்கர்!
இப்போது படம் முடிந்துவிட்டது. ஓரிரு நாளில் ரிலீஸ். மனோரமா தியேட்டரில் உதவி இயக்குனர்களுடன் சங்கர் படத்தை பார்க்கிறார். முதல் பாதி எங்கெங்கோ அலைபாய்ந்து செல்கிறது. இரண்டாம் பாதி வந்ததும், படம் வேறு லெவலுக்குச் செல்கிறது. அனைவரையும் கட்டிப் போடுகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு குறட்டை சத்தம் கேட்கிறது. அனைவரும் திரும்பி பார்க்கிறார்கள். உதவி இயக்குனர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். சங்கர் உள்ளிட்ட அனைவருமே அப்செட். படம் உறக்கம் தருகிறதா என்கிற கவலையில் ஆழ்ந்தனர். படம் முடிந்து தி.நகரில் நடந்து செல்லும் போது அவர்களுக்கு அரை குறை மனது. ‛படம் நல்லா இல்லைன்னு அவன் தூங்கல... நேற்று முழுவதும் நைட் டியூட்டி பார்த்தான்... அசதியில் தூங்கியிருக்கான்,’ என, சங்கரை அவர்கள் சமரசம் செய்கின்றனர். இனி சமரசம் செய்து என்ன நடக்கப்போகிறது; படம் முடிந்தவிட்டது நடப்பதை பார்க்கலாம் என அங்கிருந்து புறப்படுகிறார்கள். ரீலீஸ் ஆகி பட்டி தொட்டியெல்லாம் பிய்த்துக் கொண்டு ஓடியது ஜென்டில்மேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ஜீவாவின் ஒளிப்பதிவும், லெனின், விஜயனின் படத்தொகுப்பும் படத்தை எங்கோ கொண்டு சென்றுவிட்டனர்.
முதல் நாள் சைக்கிள்... மறுநாள் ஸ்கூட்டர்...ஜென்டில்மேன் மேஜிக்!
இன்று படம் ரீலீஸ்... சைக்கிளில் சென்று ஒவ்வொரு தியேட்டராக நிலைமையை பார்த்து வரப்புறப்படுகிறார்கள் உதவி இயக்குனர்கள். எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு. ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உச்சத்திற்கு செல்கின்றனர். அன்று இரவு அனைவருக்கும் நிம்மதியான தூக்கம். மறுநாள் விடிகிறது. உதவி இயக்குனர்கள் தங்கள் வீட்டின் வெளியே வந்து பார்த்தால் அனைவருக்கும் ஆச்சர்யம். அனைவர் வீட்டு வாசலிலும் கைனட்டிக் ஹோண்டா ஸ்கூட்டர் நிற்கிறது.
படத்தின் வெற்றியில் மகிழ்ந்து போன கே.டி.குஞ்சுமோன், அனைத்து உதவி இயக்குனருக்கும் ஒரு ஸ்கூட்டர் பரிசளித்தார். அப்படியானால் இயக்குனர் சங்கருக்கு? ஒரு படிமேலே போய், ஒரு காரும், ஒரு வீடும் அவருக்கு பரிசளிக்கப்பட்டது. ஒட்டுமொத்த டீமும் படம் வெற்றி பெற்ற அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு முன், பரிசு மழை பெற்ற அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஜென்டில்மேன் அவர்கள் அனைவரையும் ஜென்டில்மேன் ஆக்கியது.