இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயயான லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 432 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.


இதையடுத்து, 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.




மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது முதலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.


ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்திலே நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிய புஜாரா மேற்கொண்டு எந்த ரன்னும் சேர்க்காமல் ராபின்சன் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அவர் 91 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அவர் அவுட்டாகிய சிறிதுநேரத்தில் இந்திய கேப்டன் விராட்கோலி 9 இன்னிங்ஸ்களுக்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.




அரைசதத்தை பதிவு செய்த சிறிது நேரத்தில், ராபின்சன் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து விராட்கோலி வெளியேறினார். அவர் 125 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜராவும், கோலியும் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரியத் தொடங்கியது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் ரஹானே 25 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.




லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியை அதிரடியாக பேட் செய்து காப்பாற்றிய பந்துவீச்சாளர் முகமது ஷமி 6 ரன்களுக்கும், மற்றொரு பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 2 ரன்களுக்கும் வெளியேறினர். துரிதமாக ரன்கள் சேர்த்த ரவீந்திர ஜடேஜாவை கிரெக் ஓவர்டன் வெளியேற்றினார். ஜடேஜா 25 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்து உடனே களமிறங்கிய முகமது சிராஜூம் ரன் ஏதுமின்றி வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 99.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இதனால், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ராபின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிரெக் ஓவர்டன் 6 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதன்மூலம் பட்டோடி தொடரில் இங்கிலாந்து அணி 1-1 என்று இந்தியாவை சமன் செய்துள்ளது. லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி 54 ஆண்டுகள் ஆகியிருந்தது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி 54 ஆண்டுகளுக்கு பிறகு லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.