முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் அறிவு (எ) பேரறிவாளனுக்கு (49) சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், அவருக்கு 30 நாட்கள் பொது விடுப்பு வழங்கவேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் கடந்த  மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு  மனு அளித்திருந்தார். அற்புதம் அம்மாள் மனுவைப் பரிசீலித்த முதல்வர் மே மாதம் 16ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 30  நாட்கள் பொது விடுப்பு அளிக்க  உத்தரவிட்டார்.

 


 

இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்புடன், கடந்த மே மாதம் 28ஆம் தேதி பரோலில் அழைத்து வரப்பட்ட பேரறிவாளனுக்கு, வீட்டில் இருந்த படியே சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பேரறிவாளனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஜூன் மாதத்தோடு முடிவடையும் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள்  தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் ஜூலை 28ஆம் தேடி வரை அவரது பரோலை தமிழ் நாடு அரசு நீடித்து அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த  ஜூலை 28ஆம் தேதி  பேரறிவாளன் பரோல் முடிவடைந்து சிறை திரும்பவேண்டிய நிலையில்  அவருக்கு ரத்த அழுத்தம், மூட்டுவலி, வயிற்றுக்கோளாறு, சிறுநீரக தொற்று என உடல்நிலை மோசம் அடைந்ததால் , இரண்டாவது முறையாக அவரது பரோல் மேலும் ஒரு மாதம் அதாவது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது.

 

 

இரண்டு முறை பரோல் நீடிக்கப்பட்டு மே மாதம் 28ஆம் தேடி முதல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த பேரறிவாளனுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்  திடீரென மூட்டுவலி , சிறுநீரக தொற்று உள்ளிட்ட தொந்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை, அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தார் முடிவுசெய்தனர். அவரது தாய் அற்புதம்மாள், சிறைத்துறை அதிகாரிகளுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில்,  டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி  காவல் நிலைய ஆய்வாளர்  மணிமாறன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் விழுப்புரம் நகரம், காந்தி சிலை அருகே செயல்பட்டுவரும்  தனியார்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  மீண்டும் ஜோலார் பேட்டையிலுள்ள அவரது வீட்டிற்கு  போலீஸ் பாதுகாப்புடன்  தங்கவைக்கப்பட்டுள்ளார் .

 



 

இன்றுடன் அவரது பரோல் முடிவடையும் நிலையில் மூன்றாவது முறையாக அவரது உடல்நலம் கருதி பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களாக பரோல்  காலத்தில் பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகளை தொடர்டந்து இந்த 30 நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு சிறைத்துறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது .