இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்றும், டி20 தொடரை 3-2 என்றும் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து, புனேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி ஷிகர் தவான், விராட் கோலி, குருணால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.




மொத்தம் 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் போட்டிக்கான தொடரின் இரண்டாவது போட்டி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள புனே கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியிலும் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால், அடுத்த இரு போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்படுவார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டி தொடரை இழந்த இங்கிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தால்,  மூன்று வடிவ போட்டிகளையும் இழந்து ஒயிட்வாஷ் ஆகும் நிலை ஏற்படும்.