விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது மூலமாக இந்திய அணி இந்த போட்டித்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளைப் பொறுத்தவரையிலும் பேட்டிங்கை விட பந்துவீச்சே வலுவாக இருக்கிறது.
இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ராபின்சன், மார்க்வுட் ஆகியோர் மிக நேர்த்தியாக பந்து வீசி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிய மார்க் வுட். இரு இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த போட்டியில் கே.எல்.ராகுல், புஜாரா, ரோகித்சர்மா, ரிஷப் பண்ட் போன்ற முக்கிய விக்கெட்டுகளை மார்க்வுட்டே வீழ்த்தினார்.
கடந்த போட்டியில் ஆட்டத்தின் 5வது நாளில் பீல்டிங் செய்த மார்க் வுட், பவுண்டரி சென்ற பந்தை டைவ் அடித்து தடுத்து நிறுத்தினார். பந்தை தடுத்து நிறுத்தினாலும் அவருக்கு தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது. காயத்திற்கு பிறகு அன்றைய நாளில் அவர் பீல்டிங் செய்யவே களத்திற்கு வரவில்லை.
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் நடைபெறுவதற்கு முன்பாகவே தோள்பட்டை காயம் குணம் அடைந்து மார்க்வுட் ஆடுவார் என்று அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்திருந்தது. ஆனால், அவரது தோள்பட்டை காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகினாலும். அவர் தொடர்ந்து லீட்சில் அணியினருடனே இணைந்திருப்பார் என்றும், அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பர் என்றும் அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. பென்ஸ்டோக்ஸ் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சனுக்கு இணையாக பந்துவீசி வந்த மார்க்வுட் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்வுட் காயம்பட்டதை தொடர்ந்து, மார்க்வுட் பீல்டிங்கின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அந்த அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெப்ரி பாய்காட், நவீன கால கிரிக்கெட் வீரர்கள் தடகள வீரர்களை போல டைவ் செய்து ரன்களை தடுக்கின்றனர். அவர்களது உழைப்பு பாராட்டதக்கது. ஆனால், முன்னணி பந்துவீச்சாளர் காயம்படும் அளவிற்கு ஆபத்தாக பீல்டிங் செய்வது நல்லதல்ல என்று அறிவுறுத்தியுள்ளார். 31 வயதான மார்க்வுட் 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.