தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கவும் மூன்றாம் அலை பரவலுக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்த நிலையில் தளர்வுகளை இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அங்கன்வாடி மையங்களில் உணவு வழங்குவதற்காக திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 



கடற்கரை, பூங்காங்கள், தாவிரவியல் பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்டவைகள் அரசின் வழிகாட்டுதல்படி செயல்படும் எனவும் தகவல் தொழில்நுட்ப மையங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி அளித்து உள்ளது. பொது போக்குவரத்து, கடைகள் செயல்பட கூடுதல் நேரம்,   மதுபான கூடங்கள், விடுதிகள், திரையரங்குகள் என அனைத்தும் அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படவும் அறிவுறுத்தி உள்ளது. 



 

இந்த நிலையில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் குறித்து எவ்வித அறிவிப்பாணையும் அரசு வெளியிடாதது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் கொரோனா காரணமாக நடைபெறாமல் உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அருகே வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மட்டுமே மனுக்களை பொதுமக்கள் போட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம், மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் காலங்களில் நிறுத்தப்பட்ட கூட்டங்கள், கொரோனா தொற்று காரணமாக இதுவரை நடைபெறவில்லை.

 

ஆனால் தற்போது அரசு பல்வேறு நெறிகாட்டுதல்களை கொண்டு தளர்வுகளை அறிவித்து உள்ள நிலையில் மீண்டும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடமோ அல்லது துறைசார் அலுவலர்களிடமே நேரடியாக அளிக்கும் போது தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கவும் வாய்ப்பு இருக்கும் என கூறும் பொதுமக்கள், தமிழக  அரசு இதற்கான முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர். அதே நேரத்தில் சில குறிப்பிட்ட போராட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறும் நேரத்தில்  மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக மனுக்களை பெறுவதாகவும் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய குறைத்தீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.