இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி மிகவும் மோசமாக ஆடி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்காலும், கேப்டன் ஜோ ரூட்டின் சிறப்பான சதத்தாலும் 432 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து, மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. இங்கிலாந்தை விட 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 34 ரன்களை எட்டியபோது தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் கிரெக் ஓவர்டன் பந்துவீச்சில் 54 பந்துகளை சந்தித்து 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சட்டீஸ்வர் புஜாரா களமிறங்கினார். அவரும், ரோகித் சர்மாவும் இணைந்து நிதானமாக ஆடினர். அதேசமயத்தில் நேர்த்தியான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 116 ஆக உயர்ந்தபோது சிறப்பாக ஆடிவந்த ரோகித் சர்மா ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 156 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 59 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
தற்போது இந்திய அணி 59.4 ஓவர்களில் 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. சட்டீஸ்வர் புஜாரா 121 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகளுடனும் 71 ரன்களுடனும், விராட் கோலி 32 பந்துகளில் 3 பவுண்டரிகளுடனும் 15 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி தற்போது இங்கிலாந்தை விட 192 ரன்கள் பின்தங்கி உள்ளது. இங்கிலாந்து அணியில் ராபின்சன் ஒரு விக்கெட்டையும், கிரெக் ஓவர்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் தவிர, ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம்கரன், மொயின் அலி ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி வருகின்றனர். இந்த போட்டி முடிவடைய இன்னும் 2 நாட்கள் ஆட்டம் உள்ளது. இந்திய அணி இன்றும், நாளையும் முழுமையாக ஆடி இங்கிலாந்து அணிக்கு ஒரு வலுவான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ய முடியும். இந்திய அணியில் இன்னும் ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர்தான் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் வீரர்களாக உள்ளனர். இவர்களும் சீரான பார்மில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.