கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளால் களையிழந்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்கள் தற்போது மீண்டும் உற்சாகம் பொங்க மாறியிருக்கிறது. தமிழில் அடுத்தடுத்த மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகப் போகும் திரைப்படங்கள் என்ன?
தலைவி:
கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி ஆகியோர் முன்னனி வேடங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி இயக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இதனை இயக்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்குகள் விதிகள் தளர்க்கப்பட்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 10 அன்று இந்தப் படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
லாபம்:
விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜனநாதனின் மறைவுக்குப் பிறகு, அவரது இறுதி திரைப்படமாக வெளியாக இருக்கிறது ‘லாபம்’. ‘தலைவி’ படத்திற்குப் போட்டியாக, செப்டம்பர் 10 அன்று வெளியாகிறது ‘லாபம்’.
டாக்டர்:
சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். டார்க் காமெடி திரைப்படம் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் முதலில் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தல்களின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. ‘ரம்ஜான்’ பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டு, அதுவும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் வெளியீட்டில் தடை ஏற்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டிருப்பதால், விரைவில் இந்தப் படம் வெளியாகும்.
முருங்கைக்காய் சிப்ஸ்:
சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கும் படம் இது. இதில் ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனீஷ்காந்த், மயில்சாமி ஆகியோருடன் இயக்குநர் பாக்யராஜ் நடித்திருக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் திரையரங்குகளில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
எம்ஜிஆர் மகன்:
இயக்குநர் பொன் ராம், நடிகர் சசிகுமார் ஆகியோர் இணையும் ‘எம்ஜிஆர் மகன்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதில் சசிகுமார், சமுத்திரகனி, சத்யராஜ், மிரினாலின் ரவி, சிங்கம் புலி, சரண்யா பொன்வண்னன் முதலானோர் நடித்துள்ளனர்.
மஹா:
அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள ‘மஹா’ நடிகை ஹன்சிகாவின் ஐம்பதாவது படமாகும், இதில் சிம்பு கௌரவத் தோற்றத்திலும், நடிகர் ஸ்ரீகாந்த் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்:
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அடையாள அரசியல் குறித்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அகதியாக நடித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரண்மனை 3:
சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா முதலானோர் நடித்துள்ளனர். நடிகர் விவேக் மறைந்த பிறகு, திரையரங்குகளில் வெளியாகும் அவரது திரைப்படமாக ‘அரண்மனை 3’ இருக்கப் போகிறது.
மாநாடு:
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. வித்தியாசமான பாணியில், அரசியல், டைம் ட்ராவல் எனப் பல்வேறு பரிணாமங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘மாநாடு’. கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் 'Mehrezyla' கடந்த ஜூன் மாதம் வெளியானது.
அண்ணாத்த:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் வரும் நவம்பர் 4 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முதலானோர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அண்ணாத்த’ வெளியாகும் எனக் கூறப்பட்டிருக்கிறது,
தமிழில் வெளியாகும் இந்தத் திரைப்படங்கள் மட்டுமின்றி, வேற்றுமொழியில் இருந்து தமிழில் டப் செய்யப்படும் திரைப்படங்களான ராஜமௌலியின் ’RRR’, ராம் சரணின் ’777 சார்லி’, மோகன் லாலின் ‘மரைக்காயர்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ முதலான திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்படவே காத்திருக்கின்றன.