கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, கேரளாவில் உள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு மற்றும் இடுக்கியில் அதீத கனமழை வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. கண்ணூர் மற்றும் கோழிக்கோடில் வரும் சனிக்கிழமையிலும்(நாளை) கோட்டயம் மற்றும் பத்தினம் திட்டாவில் நாளை மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மேற்கு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை கேரளாவில் மழை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்புடுகிறது. இந்த இரு நாட்களில் அரபிக்கடலில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில் 40-50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுமட்டுமின்றி, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோழாவில் 13 செ.மீட்டர் மழையும், ஆலப்புழாவில் உள்ள செர்தலாவில் 12 செ.மீட்டர் மழையும், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா மற்றும கீரம்பராவில் 11 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்தில் 6 செ.மீட்டர் மழை முதல் 20 செ.மீட்டர் மழை வரை பதிவாகும் பகுதிகளுக்குதான் ஆரஞ்ச் நிற அலர்ட் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படும். 6 செ.மீட்டர் முதல் 11 செ.மீட்டர் மழை வரை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு மஞ்சள் நிற அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 32 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் மழை பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால், கொரோனா தொற்றுடன் பல்வேறு வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் கேரளாவில் தற்போது ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டிருப்பது அந்த மாநில மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரஞ்ச் அலர்ட் காரணமாக சுகாதாரத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.