இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி கோல்டன் டக் ஆனதால், அதிக டக் அவுட் ஆன இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாளின் முடிவில் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இதனால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 162 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்திருந்த போது ரோகித் சர்மா 36 ரன்களில் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 4 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அவருக்கு அடுத்து வந்த இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பறி கொடுத்தார். அத்துடன் தன்னுடைய கோல்டன் டக்கையும் அவர் பதிவு செய்தார்.
இந்த டக் அவுட் மூலம், அதிக டக் அவுட் ஆன இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 62ஆவது டெஸ்ட் போட்டியின் 101ஆவது இன்னிங்சில் விளையாடிய கோலியின் ஒன்பதாவது டக் ஆகும். கோலிக்கு முன்னதாக, தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் 96 இன்னிங்ஸில் 8 டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய கேப்டனாக அதிக டக் அவுட் சாதனையை தோனி வைத்திருந்தார். தற்போது அவரின் சாதனையை கோலியை முறியடித்துள்ளார்.
டெஸ்டில் அதிக டக் அவுட் ஆன இந்திய கேப்டன்கள்
கேப்டன் போட்டிகள் இன்னிங்ஸ் டக்ஸ்
விராட் கோலி 62* 101 9
எம்.எஸ்.தோனி 60 96 8
எம்.கே. பட்டோடி 40 73 7
கபில்தேவ் 34 48 6
விராட் கோலியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய 619ஆவது விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுத்தார். அத்துடன் இந்தியாவின் அனில் கும்ப்ளேவின் 619 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை சமன் செய்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார்.
இந்தப் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது.