டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்நிலையில், இன்று நடைபெற்ற மல்யுத்த தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 


65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர், கிர்கிஸ்தானின் எர்னாசரை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில் புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு பஜ்ரங் முன்னேறியுள்ளார். இரு வீரர்களும் 3-3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், டெக்னிக்கல் பாயிண்ட் கணக்கில் பஜ்ரங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 






மல்யுத்த விளையாட்டில் இந்தியாவின் முக்கியமான பதக்க வாய்ப்பு என்றால் அது இவர் தான். தன்னுடைய குரு மற்றும் பயிற்சியாளர் யோகேஷ்வர் தத் போல் இவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முனைப்புடன் உள்ளார். யோகேஷ்வர் தத் 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.  65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் பஜ்ரங் புனியா இந்தப் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் தரவரிசயில் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆகவே இவர் நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.  


முன்னதாக, இன்று காலை நடைபெற்ற மற்றொரு போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் சீமா பிஸ்லா துனிசியாவின் சாரா ஹம்டியை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் சீமா தோற்றார். இதனால், காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். ரெபிசாஜ் முறைப்படி இவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தகுதிச்சுற்று போட்டியில் இவர் எதிர்த்து விளையாடிய சாரா காலிறுதியில் தோல்வியடைந்ததால், ரெபிசாஜ் வாய்ப்பும் சீமாவுக்கு பறிபோனது. இதனால், தோல்வியுடன் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். 






2008 ஒலிம்பிக்கில் சுஷில் குமார், 2012 ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத், 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்பிருந்ததற்கு காரணம், இந்த ரெபிசாஜ் சுற்று. காலிறுதிக்கு முந்தய சுற்றில் தோற்று போகும் வீரர் / வீராங்கனைகள் எதிர்த்து போட்டியிட்டவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினால், வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்ற வீரர் / வீராங்கனையோடு அரை இறுதியில் போட்டியிட்டவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதுவார். அந்த போட்டியில், முன்பு இறுதி போட்டிக்குச் சென்ற வீரர் / வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். 


எளிதாக விளக்க வேண்டும் என்றால், பலம் வாய்ந்த வீரர் / வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்தவர்களுக்கு ‘ரெஸ்க்யூ’ எனப்படும் அந்த தொடரில், மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுவதே ‘ரெபிசாஜ்’. இப்போது இந்த வாய்ப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளதால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து சீமா பிஸ்லா வெளியேறியுள்ளார்.