இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அந்த நாட்டில் உள்ள நாட்டிங்காமின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாசில் வென்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இதையடுத்து, இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களை குவித்தனர். ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய சத்தீஸ்வர புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் விராட்கோலி கோல்டன் டக் அவுட்டாகியும், வெளியேறினார். துணை கேப்டன் ரஹானேவும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.




இதையடுத்து, ரிஷப் பண்டும், தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும் இணைந்தனர். இந்திய அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், நேற்றை ஆட்டம் மழை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் நிறுத்தப்பட்டது.


இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி சற்றுமுன் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை  எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 13 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட இந்திய அணி 51 ரன்கள் பின்தங்கியுள்ளது.