2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குத்துச்சண்டை தலைவர் உமர் கிரேம்லேவ் மற்றும் இந்திய குத்துச்சண்டை தலைவர் அஜய் சிங் ஆகியோர் முன்னிலையில் 2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் ஜரீனும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு பிறகு சர்வதேச குத்துச்சண்டை தலைவர் உமர் கிரேம்லேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ இந்தியாவிற்கு இதுதான் என்னுடைய முதல் வருகை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா குத்துச்சண்டை போட்டிகளில் மிகவும் ஆர்வமாக உள்ளது. மேலும், உலக சாம்பியன்ஷிப் தொடரை இங்கு நடத்தவும், எண்ணற்ற வெற்றிகளைக் கொண்டாடுவதற்கான சரியான வாய்ப்பாக இருக்கும். இதன்மூலம் பல பெண்கள் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடவும், முன்னெப்போதையும் விட பிரபலப்படுத்தவும் ஊக்குவிக்கும். இந்தியாவில் குத்துச்சண்டையை வளர்க்க இந்திய குத்துச்சண்டை சங்கம் கடினமாக உழைக்கிறது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதன்மூலம் மறக்கமுடியாத ஒரு மிகப்பெரிய தொடரை நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தமாக ரூ. 19.50 கோடி ($2.4 மில்லியன்) பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தோராயமாக ரூ. 81 லட்சம் ($100,000) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு பேசிய இந்திய குத்துச்சண்டை தலைவர் அஜய் சிங், “2023ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் நாடாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏழு ஆண்டுகளில் மூன்று பெரிய சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தியுள்ளது. இதன்மூலம், உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்குவதில் இந்தியாவின் திறன் வெளிப்படுகிறது. குத்துச்சண்டை உலகில் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் முக்கியத்துவத்தை இது பிரதிபலிக்கிறது.
இதன்மூலம், இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.” என்றார்.
இந்தியாவில் நடைபெறும் மூன்றாவது மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும். 2001 ஆம் ஆண்டு மகளிர் உலக சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் 2006 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை நடைபெற்றது. தற்போது இது மூன்றாவது முறை. அதேபோல், 2017 இல் பெண்கள் இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியையும் இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை விளையாடிய 12 சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியப் பெண்கள் 10 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு புதுதில்லியில் போட்டியை நடத்தியபோது, இந்திய பெண்கள் நான்கு பதக்கங்களை வென்றனர்.