பெயரை கேட்டவுடன் அவரின் நகைச்சுவை கதாபாத்திரங்கள் தான் நம் நினைவுகளில் ஓடும். அந்த அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக  மட்டுமின்றி ஒரு குணச்சித்திர நடிகராக நமது மனங்களில் குடியேறியவர் நடிகர் டெல்லி கணேஷ். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் அவர் பிரபலமானது நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்கள் மூலம் தான். 


 



ஷார்ட் பிலிமுக்கு கிடைத்த வெற்றி :


தற்போது திரையரங்கில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' படம் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படம் ஏற்கனவே 2017ம் ஆண்டு ஒரு ஷார்ட் பிலிமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு திரைக்கதை. அந்த ஷாட் பிலிமை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரைப்படமாகியுள்ளார். 'லவ் டுடே' திரைப்படத்தில் இவானா, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் ஷார்ட் பிலிமில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லி கணேஷ் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


டெல்லி கணேஷின் ஆதங்கம் :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகர் டெல்லி கணேஷ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். "நிறைய பேர் எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும். ஷார்ட் பிலிம் எடுத்திருந்தால் தான் படத்தில் வாய்ப்பு தருவதாக கூறுகிறார்கள். அதனால் கொஞ்சம் உதவி செய்யுங்கள் என பலரும் வருவார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். ஒரு வாய்ப்பு கூட கொடுக்க முன்வர மாட்டார்கள். அவர்களை பிடிப்பதே கஷ்டம். இதுவரையில் ஏதாவது ஒரு இயக்குனருக்கு ஷார்ட் பிலிம் எடுப்பதற்காக நான் உதவி செய்து பிறகு அவர்கள் வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததாக இதுவரையில் சரித்திரமே இல்லை. ஆனால் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு நான் தொடர்ந்து உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன். அவர்கள் திரும்பி எனக்கு உதவி செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்து பார்த்து யாருக்கும் உதவி செய்ததில்லை. அதனால் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்களால் நான் இல்லை என்னால் அவர்கள் இல்லை. நேரம் வரும் பது வருவார்கள். என்னுடைய வீட்டை கூட பல பேருக்கு இலவசமாக ஷூட்டிங் எடுக்க உதவி இருக்கிறேன்" என அவன் அனுபவங்கள் குறித்து மனவருத்தத்துடன் கூறியிருந்தார்.