விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார். நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.