ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ஹாக்கி ரசிகர்களின் கவனத்தையும், அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி தனது  பக்கம் ஈர்த்துள்ளார்.


”களம் எதுவானாலும் எதிரணி பாகிஸ்தான் என்றாலே இந்திய ரசிகர்களுக்கு ஏனோ கூடுதல் உற்சாகம் பிறந்து விடும். அந்த வகையில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது வீரர்கள் ரசிகர்களுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அப்போது இந்திய வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இறுதியாக 'நம்ம பையன்' என குறிப்பிடப்பட்டு தமிழகத்தை சேர்ந்த செல்வம் கார்த்தி அறிமுகப்படுத்தப்பட ஒட்டுமொத்த மைதானமுமே கரகோஷங்களால் அதிர்ந்தது”


செல்வம் கார்த்தி:


வெறும், 21 வயதை மட்டுமே கடந்துள்ள செல்வம் கார்த்தி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்திய அணிக்காக சென்னை மண்ணில் அவர் களமிறங்கியது இதுவே முதல்முறை. உலகத்தரம் வாய்ந்த ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக கோல்களை பதிவு செய்துள்ள முன்கள வீரரான இவர், நாளைய இந்திய ஹாக்கி அணியின் தவிர்க்க முடியா நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். 


ஆனால், இந்த இடத்தை அவ்வளவு எளிதாக அவர் அடைந்துவிடவில்லை. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த செல்வம் கார்த்தி கடந்து வந்த பாதை பலருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாக உள்ளது.


ஏழ்மையில் பிறந்த செல்வம் கார்த்தி:


செப்டம்பர் 1, 2001-ல் தமிழ்நாட்டின் அரியலூர் நகரில் பிறந்தவர் செல்வம் கார்த்தி.  இவரது தந்தை செல்வம் அரசுக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்தார்.  தாய் வளர்மதி அக்கம் பக்கத்து வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்தார். ஏழ்மையில் சிக்கி தவித்த இவரது குடும்பம், ஒவ்வொரு நாளின் உணவிற்காகவும் கடினமான உழைப்பை வெளிப்படுத்த வேண்டி இருந்தது. இந்த நிலையில் தான், செல்வத்திற்கு ஹாக்கி மீது மோகம் தொற்றிக் கொண்டது. வாழ்க்கையில் இருந்த பல சவால்களில் இருந்து வெளியேற விளையாட்டு அவருக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. 


நம்பிக்கை பயணம்:


சர்வதேச அரங்குகளில் கொண்டாடப்படுவோம் என்பது போன்ற எந்த எண்ணமும் இன்றி, தனக்கு பிடித்த ஹாக்கியில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செல்வம் களம் காண தொடங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் கோவில்பட்டியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஃபார் எக்ஸலன்ஸ் என்ற ஹாக்கி வீரராக கார்த்தியின் பயணம் தொடங்கியது.


இங்கே, அவர் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார் மற்றும் தேர்வர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திறமையை வெளிப்படுத்தினார். ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை  தொடர்ந்து, 2018ம் ஆண்டில் 21 வயதுக்குட்பட்ட இந்திய தேசிய அணியில் செல்வம் இடம் பெற்றார்.


சர்வதேச போட்டியில் செல்வம்:


கடின உழைப்பு மற்று விடா முயற்சியும் உழைத்து நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்ட செல்வம், கடந்த ஆண்டு மே மாதம் ஆசியக் கோப்பைக்கான இந்திய சீனியர் அணிக்கான அழைப்பை பெற்றார். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து இந்திய தேசிய அணிக்கு தேர்வான,  இரண்டாவது வீரர் என்ற பெருமையை செல்வம் கார்த்தி தனதாக்கினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மூலம், சர்வதேச ஹாக்கி அரங்கில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த போட்டியில் 9வது நிமிடத்திலேயே கோல் அடித்து, யாரு பா இது? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பினார். 


பேக்கரியில் வேலை:


நம்பிக்கை நட்சத்திரமாகவே இருந்தாலும் செல்வம் கார்த்தியின் குடும்பம் வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இல்லை. கொரோனா ஊரடங்கு வேளையில்,  ஒரு பேக்கரியில் பகுதிநேரமாக வேலை செய்தார். மாதம் ரூ. 5,000 சம்பாதித்து, தனது குடும்பத்திற்கு உதவினார்.  இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும், ஹாக்கி உலகில் வெற்றி பெறுவதற்கான அவரது உறுதி வலுவாக இருந்தது.


இதனால் தான் அடுத்தடுத்த போட்டிகளிலும் தனது அபாரமான வேகம், நுணுக்கங்கள், யுக்தியின் மூலம் கவனம் ஈர்த்து, அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். நடந்து முடிந்த ஆசியகோப்பை சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் கூட அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்வம் கார்த்தி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கான நம்பிக்கையாக உள்ளார்.


விடாமுயற்சியின் உதாரணம்:


ஆர்வமும், உறுதியும், கடின உழைப்பும் இருந்தால், சவாலான சூழ்நிலைகளைக் கூட ஒருவர் கடக்க முடியும் என்பதை, செல்வம் கார்த்தியின் பயணம் உணர்த்துகிறது. அவர் இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு களத்தில் இறங்கும்போது, ​​தனது குடும்பம் மட்டுமல்லாது, தன்னை போன்ற பலரது நம்பிக்கையையும் மைதானத்தில் சுமந்தவாறு விளையாடுகிறார். இவரது வெற்றி வறுமை என்றும் ஒருவரது திறமையை முடக்கி விடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.