ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.


லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி முடிவில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஜப்பான் மற்றும் சௌத் கொரியா அணிகள் மூன்றாவது இடத்துக்கு போட்டியிட்டது. இதில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. 


இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கிய கணத்தில் இருந்தே அனல் பறக்க ஆரம்பித்தது. குறிப்பாக முதல் 10 நிமிடங்கள் போட்டியில் மலேசிய அணியே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி போட்டியின் முதல் கோலை அடித்தது. 




அதன் பின்னர் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை, மலேசிய அணி முதல் சுற்றில் ஒரு கோலும், இரண்டாவது சுற்றில் அடுத்தடுத்து இரண்டு கோல்களும் போட்டது, இந்திய அணியின் நான்காவது கோப்பைக்கான கனவில் கடப்பாரையை இறக்கியது போல் ஆகிவிட்டது. இரண்டாவது சுற்று முடியும் வரை இந்திய அணி எவ்வளவோ போராடியும் மேற்கொண்டு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது சுற்று முடிவில் மலேசிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 


உச்சகட்ட பரபரப்பு


போட்டியின் மூன்றாவது சுற்று உச்சகட்ட பரபரப்பில் தொடங்கியது. மலேசிய அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களை கோல் போஸ்ட்டுக்கு அருகில் செல்ல விடாமல் தடுப்பதையும், நேரத்தை விரையம் செய்வதையுமே மிகத் தீவிரமாக செய்து வந்தனர். இதனால் இந்திய அணியால் கோல் போட முடியவில்லை. மூன்றாவது சுற்றில் இந்திய அணி தனக்கு கிடைத்த, பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வந்தது. 




இதையடுத்து மூன்றாவது சுற்றின் இறுதி நிமிடங்களில் இந்திய அணி தனக்கு கிடைத்த ஷூட் அவுட் முறையில் ஒரு கோலும் பரபரப்பான தருணத்தில் மற்றொரு கோலும் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது. 


இதையடுத்து போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிச் சுற்று தொடங்கியது. இறுதிச் சுற்றில் இந்திய அணி தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பை தவற விட போட்டியில் பரபரப்பு உச்சத்தை தொட்டது. 




இறுதியில் இந்திய அணி தனது 4வது கோலை அடிக்க போட்டியை 4-3 என்ற கணக்கில் வென்றதுடன் கோப்பையை 4வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.  இந்தியா போட்டியில் 9, 45, 45 மற்றும் 56வது நிமிடங்களில் கோல்களை அடித்தது. 


இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை. மேலும் தொடரை நடத்தும் ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.