அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனும் இணைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மிக வயதான ஆண் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.


லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் விளையாடிய ஆறாம் நிலை ஜோடியான போபண்ணா-எப்டன் ஜோடி 1 மணி நேரம் 34 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் முதல் சுற்றில் 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் ஜோடியான பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட் மற்றும் நிக்கோலஸ் மஹுத் ஜோடியை தோற்கடித்தது ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி. 


இந்த போட்டியில் போபண்ணா 43 வயது மற்றும் 6 மாதங்களில் யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியை எட்டியுள்ளார். இதன் மூலம் கனடாவின் டேனியல் நெஸ்டரின் சாதனையை முறியடித்தார். தற்போது இரட்டையர் தரவரிசையில் போபண்ணா 14வது இடத்தில் உள்ளார். 2017ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை போபண்ணாவிடம் உள்ளது. 


ரோகன் போபண்ணாவும் மேத்யூ எப்டனும் அடுத்ததாக மூன்றாம் நிலை ஜோடியான ஆண்டி ராம் - ஜோ சாலிஸ்பரி மற்றும் இரண்டாம் நிலை வீரரான இவான் டோடிக் - ஆஸ்டின் கிராஜிசெக் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறுவர்களை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். 






இந்தியாவின் ஒற்றையர் பிரிவு வீரர் சுமித் நாகல், ட்விட்டர் தளத்தில் போபண்ணாவை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். ரோகன் யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றால், அமெரிக்க ஓபன் வரலாற்றிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மிக வயதான வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். டென்னிஸை ஒரு தொழில்முறை விளையாட்டாக எடுத்துக்கொள்ள விரும்பும் இந்தியாவில் உள்ள பலருக்கு ரோகனின் பயணம் ஊக்கமளிக்கிறது. அரையிறுதிப் போட்டியின் முடிவில் போபண்ணா சோர்வாக காணப்பட்டார் என்றும், இந்த ஜோடி தாங்கள் இருக்கும் ஃபார்ம் மற்றும் தற்போது விளையாடும் விதம், பட்டத்தை வெல்ல முடியும் என்றும் பலர் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.