உலகின் பிரபலமான விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட்டிற்கு நிகரான விளையாட்டாக திகழ்வது டென்னிஸ் ஆகும். இந்தியாவில் டென்னிஸ் நட்சத்திரமாக பெண்களில் மிகவும் பிரபலமாக திகழ்வது சானியா மிர்சா. இவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.


கர்மன் கவுர்:


இந்த நிலையில், இந்தியாவின் புதிய டென்னிஸ் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் கர்மன்கவுர் தன்டி. டெல்லியில் பிறந்த இவர் தனது 8 வயது முதலே டென்னிஸில் தீவிர பயிற்சி எடுத்தவர். கடந்தாண்டு கனடாவில் நடைபெற்ற டென்னிஸ் தொடர் ஒன்றை கைப்பற்றி அசத்தியிருந்தார். தற்போது, சர்வேதச அளவில் தனது இரண்டாவது டென்னிஸ் தொடரை கைப்பற்றி உள்ளார்.


அமெரிக்காவில் உள்ள எவென்ஸ்வில்லேவில் நடைபெற்ற மகளிர் எவென்ஸ்வில்லே ஐ.டி.எஃப். தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த கர்மன்கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அவர் உக்ரைனின் யூலியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கர்மன்கவுர் அபாரமாக ஆடி ஆடி 7-5,4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இது அவரது நான்காவது பட்டம் ஆகும்.






அமெரிக்க ஓபன்:


கடந்த மாதம் இதே அமெரிக்காவில் சம்டெர் நகரில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கர்மனை இதே யூலியா வீழ்த்தி பட்டம் பெற்றார். தற்போது இறுதிப்போட்டியில் யூலியாவை வீழ்த்தி தனது தோல்விக்கு கர்மன் பழிக்குபழி தீர்த்துள்ளார்.  இந்த வெற்றி மூலம் அமெரிக்க ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


இந்த வெற்றி மூலம் கர்மன் டென்னிஸ் தரவரிசையில் 51 இடங்கள் முன்னேறி 210-வது இடத்தை கைப்பற்றியுள்ளார். கர்மன்கவுரின் சிறந்த தரவரிசை 196 ஆகும். கர்மன்கவுரின் பயிற்சியாளராக ஆதித்யா சச்சதேவா உள்ளார். வெற்றி பெற்ற கர்மன்கவுருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: IND vs WI: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா..வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!


மேலும் படிக்க: FIFA 2023: 16 வயதில் உலகக் கோப்பை போட்டியில் களம்.. புதிய சாதனையுடன் வலம் வரும் தென் கொரிய வீராங்கனை கேசி பேர்!