ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், கடைசியாக ரஜினியின் தர்பார் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
2017 ஆம் ஆண்டு இறுதியில் நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்திருந்தார். அடுத்த 2 ஆண்டுகள் அவரின் மக்கள் மன்ற நிர்வாகிகள் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மும்முரமாக செய்தனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் உடல் நிலையை கருத்தில் கொண்டும், தனக்கான மற்றவர்களை பணயம் வைக்க முடியாது எனவும் ரஜினி தெரிவித்து அரசியலில் இருந்து வரவில்லை என அறிவித்தார்.
இப்படியான நிலையில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், ரஜினி தான் முதன்முதலில் தமிழ்நாட்டு மண்ணில் கால் வைத்த சம்பவத்தை தான் அரசியல் பயணம் குறித்த சூசகத்தோடு சொன்னார். “நான் எஸ்.எஸ்.எல்.சி முடிச்சிட்டு வேலைக்கு போறேன்னு அண்ணன்கிட்ட சொன்னேன். அவர் நம்ம குடும்பத்துல யாரும் படிச்சது இல்லன்னு சொல்லி, நாங்க இருந்த ஏரியால மிகப்பெரிய பணக்கார ஸ்கூல்ல சேர்த்தாரு. கடன் வாங்கி தேர்வு கட்டணம் கொடுத்தாரு. நான் தேர்வு எழுதினால் பாஸ் பண்ண மாட்டேன் என எனக்கு நல்லாவே தெரியும்.
நான் அந்த பணத்தைக் கொண்டு அன்னைக்கு இரவு சாப்பிட்ட பின் பெங்களூரு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டு அங்க நின்ற ரயில் எங்க போகுன்னு கேட்டேன். தமிழ்நாடுன்னு சொன்னாங்க. டிக்கெட் வாங்கிட்டு இரவு நன்றாக தூங்கி விட்டு தமிழ்நாடு வந்தேன். டிக்கெட் செக் பண்றவங்க எல்லோர்கிட்டேயும் சோதனை பண்ணிட்டு இருந்தார். என்னோட பாக்கெட்டுல இருந்த டிக்கெட்டை காணும்.
எனக்கு தமிழும் தெரியாது. கன்னடத்துல பேசுனேன். என்னைய தள்ளி நிற்குமாறு சொல்லி, சிறிது நேரத்தில் நான் டிக்கெட் வாங்குனேன் சொன்னேன், அவர் வாங்கலைன்னு சொல்லி ஃபைன் கட்டுனா தான் போக முடியும்ன்னு சொல்லிட்டாரு. அங்க இருந்த கூலி தொழிலாளர்கள் விவரம் கேட்டு, இந்த பையன் முகத்தைப் பார்த்தா தெரியலையா என சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்து அவங்க எல்லோரும் நாங்க டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுக்கிறோம் என சொன்னார்கள்.
ஆனால் நான், என்கிட்ட பணம் இருக்குன்னு சொன்ன அப்புறம் தான் அந்த டிக்கெட் பரிசோதகர் என்னை நம்புறேன்பா. நீ போலாம் என கூறினார். அந்த டிக்கெட் பரிசோதகர், கூலி தொழிலாளர்கள் பின்னால் நிற்க நான் தமிழ்நாடு மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். அந்த நம்பிக்கை, அதேபோல் இயக்குநர் பாலசந்தரோட நம்பிக்கை, அதன்பிறகு கலைஞானம் அவர்களோட நம்பிக்கை, என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களின் நம்பிக்கை எப்படி வீண் போகலையோ, நீங்களும் என்மேல வச்ச நம்பிக்கை ஆண்டவன் அருளால வீண் போகாது” என தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியானாலும், அதற்கு இசை வெளியீட்டு விழா உட்பட எதுவுமே நடக்கவில்லை. இப்படியான நிலையில் ரஜினி நாளை ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.