மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கணைகள் கலந்துக்கொண்டுள்ளனர்.






போட்டியின் 6 வது நாளான நேற்று ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் எப்46 பிரிவில் இந்தியாவை சேர்ந்த சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு பாரிசில் நடந்த போட்டியில் 16.21 மீட்டர் தூரம் குண்டு எறிந்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை இந்த முறை அவர் முறியடித்து மகுடம் சூட்டியுள்ளார். கனடா வீரர் கிரேக் ஸ்டீவர்ட் (16.14 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், குரோஷிய வீரர் லூகா பாகோவிச் (16.04 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.


 இதனை தொடர்ந்து ஆண்களுக்கான உருளை கட்டை எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தரம்பிர் 33.61 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை  கைப்பற்றினார்.


ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தினார்.  தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனையாக செய்து புதிய வரலாறு படைத்தார். இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மொத்தமாக இந்திய அணி இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 12 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. இதுவரை நடந்த உலக பாரா தடகள் போட்டியில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்கங்கள் இதுவே ஆகும்.


கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்த 10 பதக்கங்கள் கைப்பற்றி இருந்தது.  சீனா 48 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது.


ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் வென்ற சச்சின் கூறுகையில், “ நான் இப்போட்டியில் தங்கம் வெல்வேன் என நினைத்தேன். தங்கம் கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்வேன்” என் கூறியுள்ளார்.