இளையராஜா


சென்னை ஐஐடியில் இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பான ஸ்பிக் மேகே-வின் 9வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று தொடங்கியது. ஒரு வாரம் நடக்கும் இந்த மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியில் திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி நல்லு மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சென்னை ஐஐடியில் “மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்” அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா “ எந்த ஒரு செயலை செய்தாலும் வேட்கையோடு செய்யவேண்டும் அப்படி செய்தால் அதில் நாம் உச்சத்தை அடையலாம் . இசைமேதை மொசார்ட் தோன்றி 200 ஆண்டுகள் ஆகியும் அவரைப் போன்ற ஒரு கலைஞரை உருவாக்க முடியவில்லை”


இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்


சமகாலத்தில் இசைத்துறையில்  உலகளவில் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார். கர்னாடக இசை , மேற்கத்திய இசையையும் தனது பாடல்களில் இழையோட வைத்து தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திரையிசைப் பாடல்களை உருவாக்கியிருக்கிறார் இளையராஜா. திரையிசைப் பாடல்கள் என்று பார்க்காமல் இந்தப் பாடல்களில் இளையராஜா இசையில் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு பாடமாக இருக்கப் போகின்றன. இளையராஜாவின் இசையில் மேற்கத்திய இசை ஜாம்பவானான மொசார்ட்டின் சிம்ஃபனிக்கள் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியிருப்பதாக பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இளையராஜாவும் மொசார்ட்டை தனது குரு என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மொசார்ட்டின் வாழ்க்கை வரலாற்று படமான அமேடியஸ் படத்தை பல மணி நேரம் விளக்கமாக பேசக் கூடியவர் இளையராஜா. 


மொசார்ட் சிம்ஃபனியில் விளையாடும் இளையராஜா






மொசார்ட் இசையில் இளையராஜா எவ்வளவு கைத் தேர்ந்தவர் என்பதற்கு உதாரணமாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விமர் பெர்ஸி என்கிற யூடியுப் சேனல் ஒன்றில் இளையராஜா மற்றும் மொசார்ட்டின் இசை ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் தருணங்களை இந்த சேனல் வீடியோவாக வெளியிடுகிறது. இதில் மொசார்ட்டின் புகழ்பெற்ற 25 ஆவது சிம்பனியை இளையராஜா ஒரு குத்துப்பாடலாக மாற்றியுள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். கிழக்கு வாசல் படத்தில் வீட்டுக்கு வீடு வாசற்படி வேணும் என்கிற பாடலை மொசார்ட்டின் 25 ஆவது சிம்ஃப்னியில் இருந்து எப்படி உருவாக்கினார் என்பதை இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம்