இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான யஷ்பால் ஷர்மா மாரடைப்பால் இன்று காலமானார். யஷ்பால் சர்மா 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பஞ்சாபின் லூதியானாவில் பிறந்தார். நட்சத்திர பேட்ஸ்மேனான அவர் தனது 66 வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திறமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர், 1979 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக அறிமுகமானார்.70 மற்றும் 80 களின் பிற்பகுதியில் மறக்கமுடியாத கிரிக்கெட் வீரராக திகழ்ந்த யஷ்பால், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 அரைசதங்கள் மற்றும் தேசிய அணிக்கு 2 குறிப்பிடத்தக்க சதங்களுடன் 1606 ரன்கள் எடுத்துள்ளார். 42 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 883 ரன்கள் எடுத்துள்ளார். சில ஆண்டுகளாக, யஷ்பால் தேசிய தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
யஷ்பால் சர்மா தனது முதல் சர்வதேச போட்டியை 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று லார்ட்ஸில் விளையாடினார். ஜம்மு-காஷ்மீர் பள்ளிகளுக்கு எதிராக பஞ்சாப் பள்ளிகளுக்காக 260 ரன்கள் எடுத்ததன் பின்னர் 1972 இல் அவர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்குள், மாநில அணியில் இடம்பிடித்தார். இதனைத் தொடர்ந்து, 1979 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
1983 உலகக் கோப்பையில், இந்தியாவை உலக சாம்பியனாக மாற்றுவதில் அவர் முக்கியமாக இருந்தார். முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 89 ரன்கள் எடுத்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
1983ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதனாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 183 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், புகழ்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா உலகம் முழுவதும் திகைக்க வைத்தது. கபில் தேவ் தலைமையிலான அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இந்தியாவின் லெவன்: சுனில் கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத் யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டீல், கபில் தேவ், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, மதன் லால், சையத் கிர்மானி மற்றும் பால்விந்தர் சந்து