2001 - டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கங்குலி தலைமையிலான இந்திய அணி
2021 - ஒரு நாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணிக்கு எதிராக, ஆஸ்திரேலியா மகளிர் தொடர்ந்து 26 போட்டிகள் வெற்றி கண்டுள்ளனர். இந்த வெற்றி வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய மகளிர் புது அத்யாத்தை தொடங்கியுள்ளனர்.
சரியாக 10 ஆண்டுகளில் இந்திய ஆண்கள் அணி செய்த ஒரு சாதனையைப் போல இந்திய மகளிரும் செய்து காட்டியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், முதலில் தொடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது.
கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஒரு நாள் தொடரை இழந்திருந்தாலும், கடைசி போட்டியில் மூன்று ஆண்டுக்கால தொடர் தோல்விக்கு எண்ட் கார்டு போட்டுள்ளனர். டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புற்கு 264 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, கடைசி ஓவர் வரை போராடியது. ஓப்பனர் ஷஃபாலி வெர்மா அரை சதம் கடந்து அணியின் ஸ்கோர் ஏற உதவினார். ஒன் - டவுன் களமிறங்கிய யஸ்திகா 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்களைத் தவிர தீப்தி ஷர்மா, ஸ்னே ரானா ஆகியோர் தலா 30+ரன்கள் எடுத்து அணியின் இலக்கை எட்ட உதவினார். கடைசி ஓவரில் வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்ற நிலையில், சீனியர் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி பவுண்டரி அடித்து இந்திய மகளிர் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அதிக ரன்களை வெற்றிகரமாக இலக்கை சேஸ் செய்தது மட்டுமின்றி, 26 போட்டிகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.