சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 ஒரு நாள், 1 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில், இன்று முதல் ஒரு நாள் நடைபெற்றது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிரிதி மந்தானா, ஷஃபாலி வெர்மா ஆகியோர் களமிறங்கினார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்டானதை அடுத்து பேட்டிங் களமிறங்கினார் கேப்டன் மிதாலி ராஜ்.
இந்த போட்டியில், 107 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அரை சதம் கடந்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடிக்கும் 8வது அரை சதம் இது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் இது மிதாலிக்கு 6வது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, ஒரு நாள் கிரிக்கெட்டில், தொடர்ந்து ஐந்து அரை சதங்கள் கடந்த முதல் பேட்ஸ்வுமனாகவும் மிதாலி அதிரடி காட்டியுள்ளார். மேலும், மிதாலி ராஜ் அரை சதம் கடந்த கடைசி ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும், அதே போட்டியில் விளையாடிய வேறு இந்திய பேட்ஸ்வுமன்கள் யாரும அரை சதம் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், 50 ஓவர் முடிவில் 225 ரன்கள் எடுத்தது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஓப்பனிங் பேட்ஸ்வுமனகள் ஹேன்ஸ் மற்றும் அலிசா ஹீலி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஹேன்ஸ் 93* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அலீசா ஹீலி 77 ரன்கள் எடுக்க, ஒன் டவுன் களமிறங்கிய மெக் லானிங் 53* ரன்கள் எடுக்க 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது ஆஸ்திரேலிய அணி. இதனால், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி.