ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே  தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்துள்ளது கொண்டாபுரம் கிராமம் . இந்த கிராமத்தில் 100  ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த  காமாட்சி அம்மன் உடனுறை பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது .


பல வருடங்களாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த கோயிலில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளது  . குறிப்பாக 100 வருடத்திற்கு மேல் பழமையான இந்த கோயிலில் 10 வருடத்திற்கு முன்பாக கோயிலின் மேல்புறத்தில் இருந்த கலச கோபுரங்கள் இரிடியத்திற்காக மர்ம நபர்களால் திருடப்பட்டது .  இது தொடர்பாக காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தும் , 10 வருடங்கள் கடந்தும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை . அதன் பின்னரே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த கோயிலை , இந்து அறநிலைத் துறையினர் மீட்டு அவர்களது கட்டுப்பாட்டில் பராமரித்து வருகின்றனர் .




இந்நிலையில் சென்ற வாரம் , 16 ஆம் தேதி கோயிலிலுள்ள அம்மன் சிலை மேல் உடுத்தியிருந்த  சேலையை மர்ம நபர்கள் அம்மனின் மூலஸ்தானத்திலே தீ வைத்து எரித்துள்ளனர் .


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கொண்டாபுரம் கிராம மக்கள் , இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தாளாது கிராமத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று அஞ்சி , ரகசியமாக அடுத்த நாளே  ( ஜூலை மாதம் 17 ஆம் தேதி ) இந்த சம்பவம் தொடர்பாக  காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக  புகார் கொடுக்காமல்  வாய் வார்த்தையாக ஊர்மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .


சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகியும்  அவர்களது புகார் மீது காவேரிப்பாக்கம் போலீசார்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று,  ஹிந்து முன்னணி கட்சியின் காவேரிப்பாக்கம் கோட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஹிந்து முன்னணியினர் மற்றும்   கொண்டாபுரம் ஊர்மக்கள் , ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் , அம்மன் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களிடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர்  .




புகார் மனுவினை பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, காவேரிப்பாக்கம் போலீசாரை இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் . மேலும் கோவில் நிர்வாகத்திடம் கோயிலை சுற்றி சிசிடிவி கேமரா அமைக்கவும் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படும்  இந்த கோயிலுக்கென்று தனியாக இரவுநேர காவல்காரர் ஒருவரை நியமிக்கவும் , பரிந்துரை செய்தார் .


பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் சிலையை அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் இன்று காட்டுத் தீ போல் மற்ற கிராமங்களுக்கும்  பரவத் தொடங்கியுள்ளது .இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட   கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர் .