இலங்கை உடனான மீதமுள்ள டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது. நெட் பவுலர்கள் 5 பேர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் உள்ள இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு இரண்டாவது மற்றும் மூன்றாவது டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நெட் பவுலர்களான இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், ஆர் சாய் கிஷோர் மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகியோர் மீதமுள்ள டி 20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெறுவார்கள்.
கடந்த 27 ஆம் தேதி க்ருணல் பாண்ட்யா கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர், அணியின் அனைத்து உறுப்பினர்களும் துணை ஊழியர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக பரிசோதிக்கப்பட்டனர். க்ருணாலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேர் உள்பட அனைவருக்கும் சோதனை முடிவுகளில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
ஜூலை 27 ஆம் தேதி சோதனையைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 28) நண்பகலில் ஒரு விரைவான ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்பட்டது, அவை அனைத்தும் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ளன.
இருப்பினும், அணியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 8 நெருங்கிய தொடர்புகள் அணி ஹோட்டலில் தொடர்ந்து தனிமையில் இருக்கும். மீதமுள்ள டி 20 போட்டிகள் அட்டவணைப்படி தொடரும்.
முன்னதாக, இந்தியா - இலங்கை மோதும் இரண்டாவது டி20 போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரானா, சேத்தன், தேவ்தட் படிக்கல் ஆகியோர் அறிமுக வீரராக இந்தப் போட்டியில் களமிறங்குகின்றனர்.