இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. மிகவும் பரபரப்பான ஆட்டத்தில்,   தென்னாப்பிரிக்கா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விலையாய் வருகிறது.  காயம் காரணமாக ரோஹித் ஷர்மா அணியில் இடம் பெறாததால், ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது


இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வி அடைவதாக இருந்தது. ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. 


3-வது ஒருநாள் போட்டி:  


இன்றைய போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர் மற்றும் பிரஷீத் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரவிச்சந்திரன் அஷ்வின், வெங்கடேஷ் ஐயர், புவனேஸ்வர் குமார்,ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படவில்லை. 


டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன் எடுத்தது. 288 ரன் இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் 9 ரன்னில் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.  2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷிகர் தவானும், விராட்கோலியும் சிறப்பாக விளையாடி ரன்னை குவித்தனர். விராட் கோலி 65 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 61 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 


அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், மற்றும் சிரேயாஸ் ஐயர் ஜோடி நிதானத்துடன் விளையாடி ரன் குவித்தனர். இக்கட்டான சூழலில், இந்த ஜோடி 33 பந்தில் 39 ரன் சேர்த்தது. 10 ரன் எடுத்த நிலையில் சிரேயாஸ் ஐயர் வெளியேறினார். அதன் பின் களமிறங்கியு தீபக் சாஹர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரி மூலம் வெறும் 34 பந்தில் 54 ரன் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். வெறும் 10 ரன் எடுத்தாள் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. அதன்பின், களமிறங்கிய பும்ரா, சஹால் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 


ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயக்கனுக்கான இரண்டு விருதுகளையும் 'குவின்டன் டி காக் பெற்றார்.