ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, சௌத் கொரியா என மொத்தம் 6 அணிகள் விளையாடி வரும் இந்த தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. 


இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அடுத்த அணி எது என்பதை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான் தீர்மானிக்கும். அதாவது இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒரு கோல் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்தால் ஜப்பான் அணியுடன் ஷூட்-அவுட் முறையில் யார் அந்த நான்காவது அணி என்பது முடிவு எடுக்கப்படும். பாகிஸ்தான் அணி 2 கோல் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தால் ஜப்பான் அணி அரையிறுதிக்கு முன்னேறும். 




இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் இந்திய அணி இரண்டாவது சுற்றில் மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டதுடன் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பும் மங்கிப் போனது. போட்டி நேரம் பாதி முடிந்ததும், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 


பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறவேண்டும் என்றால் இந்த போட்டியை டிரா செய்ய வேண்டும். ஆனால் இளம் பாகிஸ்தான் அணி இந்திய அணியை சமாளிக்க முடியாமல் தவித்தது. இந்திய அணி மூன்றவது சுற்றில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலம் இந்திய அணியின் ஹுஜ்ரஸ் சிங் இந்திய அணியின் மூன்றாவது கோலை அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. 


அதன் பின்னர் நான்காவது சுற்றில் இந்திய அணியின் மந்தீப் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக மற்றொரு கோலை அடித்தனர். இதனால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இமாலய வெற்றியை உறுதி செய்தது. 




இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத அணி என்ற பெருமைக்கு ஆளாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 


பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதாலும், சீனாவுடனான போட்டியி ஜப்பான் அணி வெற்றி பெற்றதாலும் ஜப்பான் அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 




இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 20 கோல்கள் அடித்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மற்ற அணிகள் அனைத்தும் சேர்த்து 5 கோல்கள்தான் அடித்துள்ளது. 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள ஜப்பானை வரும் 11ஆம் தேதி எதிர்கொள்கிறது.