மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும் தொடர்ந்தது. இரண்டாவது நாளான இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
ஃப்ளையிங் கிஸ் சர்ச்சை:
அப்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி ராகுல் காந்தி ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் உரையை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஃப்ளையிங் கிஸ் விவகாரத்தை முன்வைத்து கடுமையாக சாடினார். "எனக்கு முன் பேசியவர் கிளம்பும் முன் அநாகரீகமான செயலை செய்துவிட்டு கிளம்பியுள்ளார்.
ஆணாதிக்கவாதியால் மட்டுமே பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுக்க முடியும். கண்ணியமற்ற செயலை ராகுல் காந்தி செய்துள்ளார்" என்றார்.
காங்கிரஸ் கட்சி அளித்த விளக்கம்:
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. "ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி பொதுவாகத்தான் அவர் இந்த செய்கையை செய்தார். குறிப்பிட்ட அமைச்சரை நோக்கியோ எம்பியை நோக்கியோ அவர் இப்படி செய்யவில்லை" என காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "சகோதர, சகோதரிகளே என்ன சொன்னதால் உரை முடித்து செல்லும்போது ராகுல் காந்தி அந்த செய்கையை செய்தார். குறிப்பிட்ட அமைச்சரை நோக்கியோ எம்பியை நோக்கியோ குறிப்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை நோக்கி அவர் அப்படி செய்யவில்லை" என்றார்.
பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் புகார்:
இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், "ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியை நோக்கி தகாத செய்கை செய்துள்ளார். அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். அவையில் உள்ள பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
எனவே, அவருக்கு எதிராக கடும் நடவடக்கை எடுக்க வேண்டும். இது அவைக்கு அவப்பெயர் விளைவித்ததுடன் அதன் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய ஸ்மிருதி இரானி, "நாடாளுமன்றத்தில் இந்த அளவுக்கு வெளிப்படையாக ஆணாதிக்க செயலை கண்டதில்லை. பெண்களின் கண்ணியத்தை காப்பதற்காக சட்டம் இயற்றப்படும் அவையில் ஒரு நபரின் ஆணாதிக்க செயலை அவை உறுப்பினர்கள் கண்டுள்ளனர். அவரை திருத்த வேண்டாமா?" என தெரிவித்துள்ளார்.