இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணியிடம் இரு அணிகளும் தோற்ற பிறகு நடைபெறும் தொடர் என்பதால், இந்த தொடர் மீது இரு நாட்டு அணிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த நிலையில், இந்த தொடரில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்திய கேப்டன் விராட்கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.
விராட்கோலி 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்களையும் குவித்துள்ளார். விராட்கோலி இறுதியாக 2019ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அதன்பின்பு, சர்வதேச போட்டிகளில் எந்த வடிவிலான ஆட்டத்திலும் கோலி தனது சதத்தை பதிவு செய்யவில்லை.
கோலி வங்காளதேசத்துடனான தனது சதத்தை பதிவு செய்தபோது ஒரு கேப்டனாக சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார். ரிக்கி பாண்டிங் இதுவரை அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக மொத்தம் 324 போட்டிகளில் ஆடி 41 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி அனைத்து வடிவிலும் 201 போட்டிகளில் கேப்டனாக ஆடி 41 சதங்களை அடித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் பெரியளவிலான போட்டிகள் நடத்தப்படாததால் விராட் கோலியால் பெரியளவு ரன்களை குவிக்க இயலவில்லை. மேலும், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களிலும் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடரும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த போட்டியில் அவர் சதம் அடித்தார் கேப்டனாக அதிக சதம் அடித்தவர் என்ற புதிய உலகசாதனையை அவர் படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், விராட்கோலிக்கு பிறகு அந்த பட்டியலில் கிரேம் ஸ்மித் 33 சதங்களுடனும், ஸ்டீவ்ஸ்மித் 20 சதங்களும், மைக்கேல் கிளார்க் 19 சதங்களும், ப்ரையன் லாரா 19 சதங்களும் அடித்துள்ளனர். அவர்களில் ஸ்டீவ் ஸ்மித் தவிர அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். ஸ்டீவ் ஸ்மித் சாதாரண வீரராக மட்டுமே அணியில் தொடர்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் மட்டும் விராட்கோலி 10 போட்டிகளில் ஆடி 727 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் இரு சதங்களும், மூன்று அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.