தமிழில் களவாணி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவருக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. எதையும் நேர்மையுடன்  , துணிச்சலுடன் , அன்புடன் அணுகும் ஓவியாவின் குணம் ரசிகர்களுக்கு பிடித்து போனது. ஓவியாவிற்குதான் முதன் முதலில் ’ஆர்மி’ என்ற ஒன்றை தொடங்கி ரசிகர்கள் ஆதரவு குரல் எழுப்பினர். ஓவியா தற்போது வெப் சீரிஸ், ஃபோட்டோ ஷூட், படங்கள் என கவனம் செலுத்து வந்தாலும்  , ட்விட்டரில் அவர் இடும் கருத்துகளும் அதிகமாக கவனிக்கப்படுகின்றன. சமீபத்தில்  புரூனோ என்ற நாயை அடித்து கொடுமை செய்த இளைஞர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். முன்னதாக குழந்தைகளின் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு அனுப்பிய விவாகரம் தொடர்பாக #Arrestmetoo என பதிவிட்டிருந்தார் . இப்படியாக ஓவியாவின் பதிவுகளில் அதிக அளவில் சமூக பார்வையும் அரசியல் பார்வையும் இருந்து வருகிறது.






இந்நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஓவியா , நடிகையாக இருந்தால் சமூகம் சார்ந்த பார்வை இருக்க கூடாது என்பதில்லை, எனது கருத்துகள் தனிப்பட்ட தாக்குதலும் கிடையாது. இந்த சமுதாயத்தில் வாழும் சக மனிதனின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தினசரி நடக்கும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட  சம்பவங்களை பார்க்கும் பொழுது , இது நாம் வாழ தகுதியற்ற , பாதுகாப்பற்ற இடமாக தோன்றுவதாக தெரிவிக்கிறார். கலாச்சாரம் என்பது தன்னை தானே ஒழுங்குப்படுத்திக்கொள்வதுதான் என தெரிவிக்கும் ஓவியா,இந்த காலத்து இளைஞர்களுக்கு சமூகம் சார்ந்த சிந்தைனைகள் குறைந்துவிட்டதாகவும், பணத்தை தேடி ஓடும் சுயநலவாதிகளாகிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.






தான் தெரிவிக்கும் கருத்துகளில் கம்யூனிசம் சாயல் இருந்தால் நான் ஒரு கம்யூனிஸ்ட்தான் , தத்துவம் பேசுபவராக இருந்தால் நான் ஒரு பிலாசிஃபிக்களான ஆள்தான். என்னை என்னவாக நினைத்தாலும் நான் அதுவேதான் என்னும் ஓவியாவிற்கு அரசியல் ஆசை உள்ளதாம் . அப்படியான சூழலுக்கு தான் தள்ளப்பட்டால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் அது நிச்சயம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். என்னை நடிகையாக வரவேற்று அன்பு கொடுத்தவர்களுக்குதான் நான் அன்பை திருப்பி கொடுக்க விரும்புகிறேன் என பதிலளித்துள்ளார். மேலும் தனக்கு பெண்ணியம் , தேசப்பற்று உள்ளிட்டவைகள் மீது நம்பிக்கை இல்லை. சக உயிர்களுக்கு பிரச்சனை எனில்  அதற்கு குரல் கொடுப்பேன் என கூறும் ஓவியா எந்த வரையறைக்குள்ளும் வர மாட்டேன் என்கிறார். முப்பது வயதிற்கு மேல்தான் நடிகைகள் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவார்கள் ஆனால் ஓவியாவிற்கு , நடிப்பு , விருதுகள், ஃபேம் போன்றவை அலுத்துவிட்டதாக கூறி ரசிகர்களை  ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஓவியா நடிப்பில் ’மெர்லின்’ என்ற வெப் தொடர் வெளியானது. இதனை தொடர்ந்து  தற்போது  நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ்வுடன் ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.