பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் பொதுமக்கள் / முதலீட்டாளர்கள் வசம் இருக்க வேண்டும் என செபி உத்தரவிட்டது. 2010-ம் ஆண்டு முதல் இந்த உத்தரவு இருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறைந்த சதவீத பங்குகள் மட்டுமே வர்த்தகமாகும்போது குறிப்பிட்ட சிலர் இணையும் பட்சத்தில் பங்குகளின் விலையில்  மாற்றம் செய்யமுடியும் என்பதால் 25 சதவீத பங்குகள் வர்த்தகமாக வேண்டும் என 2010-ம் ஆண்டு விதிமுறையை செபி உருவாக்கியது. தொடக்கத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.


ஆனால் 2014-ம் ஆண்டு முதல் மற்ற நிறுவனங்களை போல பொதுத்துறை நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு பொதுமக்கள் வசம் இருக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. முதலில் மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்கப்பட்டுவந்தது. இந்த கால  அவகாசம் ஆகஸ்ட்  மாதத்தில் அவகாசம் முடிய இருக்கிறது.




இந்த நிலையில் குறைந்த பட்சம் 25 சதவீத பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்னும் விதி பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது. அதாவது மத்திய அரசு விரும்பினால் அந்த சலுகையை எந்த பொதுத்துறை நிறுவனத்துக்கும் வழங்கலாம் என விதிமுறையை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.


மெகா ஐபிஓ


இந்த விதிமுறையை மாற்றுவதற்கும் எல்.ஐ.சி. ஐபிஓவுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும்.  எல்.ஐ.சி. மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் முதல் ரூ.15 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.


தற்போதைய விலை நிலவரப்படி ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.13.11 லட்சம் கோடி. டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.11.71 லட்சம் கோடி. அடுத்த இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி இருக்கிறது. இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.7.88 லட்சம் கோடி மட்டுமே. தற்போதைய சூழலில் எல்.ஐ.சி. பட்டியலும் பட்சத்தில் சந்தை மதிப்பு அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாக மாறும்.


25 சதவீத பங்குகளை வெளியிட வேண்டும் என்னும் பட்சத்தில் சுமார் 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட வேண்டும். இது மிகப்பெரிய தொகை. தவிர ஒரே நிதி ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவதில் சிக்கல் உருவாகலாம் என மத்திய அரசு கருதலாம்.


குறைந்த தொகை என்னும் பட்சத்தில் எல்.ஐ.சி போன்ற பெரிய நிறுவனத்தின் ஐபிஓவை எளிதாக வெளியிட முடியும் என மத்திய அரசு திட்டமிட்டுவதாக தெரிகிறது.




செபி விதிமுறைகளின் படி குறைந்தபட்சம் 10 சதவீதம் வர்த்தகமாக வேண்டும். ஆனால் அந்த சதவிகித்தை கூட ஒரே சமயத்தில் குறைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை என தெரிகிறது. முதல் 5% முதல் 6% சதவீதம் வரை குறைத்துக்கொண்ட பிறகு அடுத்தகட்டமாக மீதமுள்ள சதவீதத்தை குறைத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது. ஒரே சமயத்தில் நிதி திரட்டுவதை விட பட்டியலான பிறகு பங்கின் மதிப்பு எப்படியும் கணிசமாக  உயரும், அந்த விலையில் சில சதவிகித்தை குறைத்துக் கொள்வதன் மூலம் பிரீமியத்தில் கூடுதல் தொகையை திரட்ட முடியும் என மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது.


நடப்பு நிதி ஆண்டில் பொத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இதுவரை ரூ.7,645 கோடி மட்டுமே  திரட்டப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் (2022 ஜனவரி முதல் மார்ச் வரை) ஐபிஒ வெளியிட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


எல்.ஐ.சி. ஐபிஓ முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.