லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்கள் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோகித் சர்மாவைப் போல இந்தியாவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் ஷர்துல் தாக்கூர். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் 57 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்களையும் எடுத்தார். மேலும், இரு இன்னிங்சிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளான ரோரி பர்ன்ஸ் மற்றும் அபாயகரமான ஆட்டக்காரர் ஜோ ரூட்டை ஆட்டமிழக்க செய்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஷர்துல் தாக்கூருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “ இந்த தருணத்தை பார்க்கும்போது, ஷர்துல் தாக்கூர் எதை தொட்டாலும் பொன்னாக மாறுகிறது. அதாவது, அவர் ஆடிய சில ஷாட்கள் மிகவும் அற்புதமானவை. ஸ்ட்ரெய்ட் டிரைவில் அவர் அடித்த சிக்ஸ். அதை பார்த்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர் நம்பிக்கையுடன் பேட் செய்ததை பார்க்க முடிந்தது. அதுதான் மிகவும் கவர்ந்தது.
இங்கிலாந்து மைதானத்தில் அவர் பந்துவீசியது மிகவும் அற்புதமாக, நேர்த்தியாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேனான ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு இடது புறத்தில் அற்புதமாக பந்துவீசி அவரை வீழ்த்தினார். பின்னர், ஜோ ரூட்டை வீழ்த்தினார். ஜோ ரூட்டிற்கு பந்தை கீழே வீசி, பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியதால் ஜோ ரூட் அவுட்டானார்.
ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை அளிக்கிறார். பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை அளிக்கிறார். இந்திய அணி 8ம் நிலைக்கான வீரரை கண்டறிந்துள்ளது.” இவ்வாறு அவர் ஷர்துல் தாக்கூருக்கு புகழாரம் சூடியுள்ளார்.
ஷர்துல் தாக்கூரின் இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்த நாட்டின் கப்பா மைதானத்தில் 67 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஷர்துல் தாக்கூர் தொடர்ந்து அயல்நாட்டு மண்ணில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்.
இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள 29 வயதான ஷர்துல் தாக்கூர் டெயிலண்டராகவே களமிறங்கி 190 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் மூன்று அரைசதங்கள் அடங்கும். இந்த மூன்று அரைசதங்களும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 4 டெஸ்ட் போட்டிகளில் ஷர்துல் தாக்கூர் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.