ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது. இதுவரை, ஓவல் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
நான்கு நாள் ஆட்டம், சுருக்கமாக:
இந்தியா விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில், இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்பட்டது.
இந்திய பந்துவீச்சாளர்களின் பர்ஃபாமென்ஸ்
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுத்தபோது, பர்ன்ஸ் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் அவுட்டானார். அரை சதம் கடதிருந்த அவர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹசீப்பும் அரை சதம் கடந்தார். ஒன் - டவுன் களமிறங்கிய மாலன் ரன் - அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஜடேஜா பந்துவீச்சில் ஹசீப் வெளியேற, பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து போப் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் ஆட்டமிழந்தனர். வந்த வேகத்தில் மொயின் அலியும் டக் -அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 100 ரன்கள் எடுத்த பிறகு அடுத்த 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. ரூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தபோது, தாகூரின் பர்ஃபெக்ட் பந்துவீச்சால் ரூட் வெளியேறினார். இங்கிலாந்தின் நம்பிக்கை பேட்ஸ்மேனான ரூட் வெளியேறியவுடன் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தவிடுபொடியானது. ஆட்டம் ஸ்லோவானது.
இந்திய அணி பெளலர்களைப் பொருத்தவரை, ஷிஃப்ட் எடுத்து வந்து விக்கெட்டுகளை வீழ்த்திச் சென்றனர். டெயில் எண்டர்களுக்கு சவாலான டெலிவரிகளை வீசினார் உமேஷ் யாதவ். விளைவு, வோக்ஸ் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டுகள் சிக்கின. அவரைத் தொடர்ந்து கடைசியாக களமிறங்கிய ஆண்டர்சனின் விக்கெட்டையும் எடுத்த உமேஷ், இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம், 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது.
வரலாறு படைத்த இந்திய அணி
ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் இலக்கை துரத்திச்சென்ற அணிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள அணி என்ற சாதனையை இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்த நிலையில், சுனில் கவாஸ்கரின் அற்புதமான இரட்டை சதத்தினாலும், சேட்டன் சவுகான், திலீப் வெங்கர்சகர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களை குவித்தது. கவாஸ்கரின் 221 ரன்களால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.
முன்னதாக, 1971-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் டிராவாகவே, மூன்றாவது போட்டியை வென்று இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் தொடரை கைப்பற்றி அசத்தியது. அப்போதைய இந்திய அணி கேப்டன் அஜித் வடேக்கர் தலைமையிலான இந்திய அணி செய்த சாதனையை இப்போது கோலி படை செய்து முடித்துள்ளது.