இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் நகரில் நடைபெற்று வருகிறது.


இந்த போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அப்போது, தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 204 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச போட்டிகளில் இதுவரை 7 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள ரோகித் சர்மாவிற்கு இதுவே வெளிநாட்டு மண்ணில் முதல் டெஸ்ட் சதமாகும்.




ரோஹித் சர்மா சதமடித்தபோது பெவிலியனில் அடுத்து களமிறங்க தயாராக இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி மிகுந்த உற்சாகமாக கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், கைகளை ஆவேசமாக தூக்கியும் ரோகித் சர்மாவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.






ரோஹித் ஷர்மா சதமடித்ததை இந்திய கேப்டன் விராட் கோலி கொண்டாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோகித் சர்மா ரசிகர்களுக்கும், விராட் கோலி ரசிகர்களுக்கும் இடையே ஐ.பி.எல். போட்டியின் வெற்றி, தோல்வியை கணக்கிட்டு அவ்வப்போது மோதல் போக்கு நிலவிவருகிறது. மேலும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.




ஆனால், களத்தில் விராட்கோலியும், ரோஹித் ஷர்மாவும் எப்போதுமே மிகவும் இயல்பாகவும், நெருங்கிய நட்புடனே பழகி வருகின்றனர். இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவின் சதத்தை விராட் கோலி கொண்டாடுவது இருவருக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பு வகிக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை.


ஆனால், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மூன்று முறை இரட்டை சதங்களை குவித்த ரோஹித் சர்மா வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதமடிக்காமலே இருந்தது அவர் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தனது சதத்தின் மூலம் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ரோஹித் ஷர்மா சதத்தின் உதவியால் இந்திய அணி இந்த போட்டியில் தற்போது 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


மேலும் படிக்க : Rohit Sharma Records: அடித்தது ஒரு சதம்...! படைத்தது பல சாதனை...! - ரோகித் சர்மாவின் நியூ ரெக்கார்ட்ஸ்