தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகருள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு(Yogi babu). தற்போது பல ஸ்டார்டம் வேல்யூ கொண்ட நடிகர்களின் படங்களுக்கு யோகி பாபுவை கமிட் செய்ய வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காம்போவில் பெயர் வைக்கப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் யோகிபாபு சிறிய வேடத்தில் காமெடியனாக நடித்திருந்தார். அப்போது அவர் ஷாருக்கானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கூட இணையத்தை கலக்கின. இந்நிலையில் யோகிபாபு ஷாருக்கானுடன் மீண்டும் இணைய உள்ளார். ஆனால் இம்முறை முழுநேர காமெடியனாக வலம் வர உள்ளார்.
வடிவேலுவின் வெற்றிடம் பல இளம் காமெடி நடிகர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது. அவர்களுள் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் யோகி பாபுவின் கால்ஷீட்டிற்காக காத்துருக்கின்றனர், அதே சமயம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் , சில படங்களில் கதாநாயகனாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக தர்ம பிரபு, மண்டேலா போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின், தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரீமேக் வெளியீட்டு உரிமையை தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். மேலும் படத்தை இயக்கவும் செய்கிறார். படத்தில் கதாநாயகனாக தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தில் காமெடியனாக நடிக்கும் யோகி பாபு படத்திற்கான தன்னுடைய டப்பிங் போர்ஷனை முடித்துக்கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இது தவிர காடுகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மையமாக வைத்து யாசின் இயக்கத்தில் பிரபாதீஸ் சாம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த படம் நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் யோகி பாபுவுடன் மொட்டை ராஜேந்தர் நடித்து வருகிறார். முன்னதாக படத்திற்கு ‘ வீரப்பனின் கஜானா’ என பெயர் வைத்திருந்தனர் படக்குழு. இந்நிலையில் அந்த பெயரை மாற்றுமாறு சந்தன கடத்தல் வீரப்பனின் குடும்பத்தினர் படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெயரை மாற்ற படக்குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படத்திற்கு வேறு பெயர் வைக்கப்பட்டு, படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.