இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருப்பினும், புஜாரா மற்றும் ரோகித்சர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 61 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 256 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 127 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா(Rohit Sharma) பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
சச்சினுக்கு அடுத்து ரோகித் :
இந்த போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரோகித் சர்மா தனது 246வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் தனது 241வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரனகளை கடந்து, அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை தொடக்க வீரராகவே கடந்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ள ரோகித் சர்மாவிற்கு, இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். மேலும், சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவிற்கு இது 35வது சதமாகும்.
15 ஆயிரம் ரன்கள் :
மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து, ரோகித் சர்மா தனது 15 ஆயிரம் ரன்களை இந்த போட்டியில் கடந்துள்ளார். 15 ஆயிரம் ரன்களை கடக்கும் 8வது இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஓவல் மைதானத்தில் நேற்று அடித்த சதம் மூலம் இங்கிலாந்தில் மட்டும் ரோகித் சர்மா இதுவரை 2 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா தனது சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார்.
ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் :
2021ம் ஆண்டில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 2021ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு அடுத்த இடத்தில் 21 இன்னிங்சில் ஆடி 906 ரன்களுடன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா இந்த தொடர் தொடங்கியது முதல் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு சதம், இரண்டு அரைசதங்களை ரோகித்சர்மா இந்த தொடரில் இதுவரை அடித்துள்ளார். மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.