விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இங்கிலாந்துடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடருக்கு முக்கியமான 5வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.


இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பிசியோதெரபிஸ்ட்டுகள் இருவர் என அடுத்தடுத்து இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 5வது டெஸ்ட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.




கடந்த 10-ந் தேதி தொடங்க வேண்டிய இந்த போட்டி நடைபெறாததால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கைவிடப்பட்ட பட்டோடி தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


இதன்படி, கைவிடப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியை அடுத்தாண்டு நடத்த இங்கிலாந்து மற்றும் இந்திய கிரக்கெட் வாரியங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. அடுத்தாண்டு கோடை காலத்தில் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த ஒரு டெஸ்ட் போட்டியுடன் இரண்டு டி20 போட்டிகளையும் சேர்த்து நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.




முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பட்டோடி தொடரில் முதல் டெஸ்ட் மழையால் கைவிடப்பட்டது. ஆனால், உலகப்புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்திலும், லண்டன் ஓவல் மைதானத்திலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இங்கிலாந்து அணி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. மான்செஸ்டர் போட்டி டிராவில் முடிந்திருந்தாலே இந்திய அணி அந்த தொடரை கைப்பற்றியிருக்கும். ஆனால், கொரோனாவால் அது சாத்தியமற்று விட்டது.


இந்திய கிரிக்கெட் அணி அடுத்தாண்டு பங்கேற்க உள்ள தொடர்களின் முழு விவரமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டது.அதில், இங்கிலாந்து அணியினருடான எஞ்சிய போட்டிக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அட்டவணையில் இந்திய அணி நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்க அணிகளுடன் விளையாடுவதற்கான போட்டி அட்டவணைகள் மட்டுமே உள்ளது.


மேலும் படிக்க : PUNJAB WIN : கடைசி வரை போராடிய ஜேசன் ஹோல்டர்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப்..!