சென்னை துரைப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள இந்துஸ்தான் பல்கலைழகத்தில், இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர்,  நாளை திங்கட்கிழமை சென்னையில் உள்ள நிறுவனத்தில், இண்டர்வியூ ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளனர். பின்னர் நண்பர்களுடன் தி. நகரில் பொருட்களை வாங்கிவிட்டு இரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காரைப்பேட்டை பகுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்



இந்நிலையில் நண்பர்கள் இரவில் நைட் டிரைவ் போகலாம் என்று காரை எடுத்துக்கொண்டு ஜிஎஸ்டி சாலையில் சென்றுள்ளனர். அங்கிருந்து செல்லும் பொழுது சொகுசு காரை மேட்டுரை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் , அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது நவீன் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய சொகுசு கார், அங்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வைக்கப்பட்டிருந்த டிரைலர் லாரி மீது மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் காரில் இருந்த 5 பேரின் உடல்களை தாம்பரம் தீயணைப்பு துறையினர் 3 மணிநேரம் போராடி காரில் இருந்து மீட்டனர்.



 

உயிரிழந்த 5 பேரின் உடலையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் பொதுவாக கிழக்கு கடற்கரை சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் நைட்  டிரைவ் என்ற பெயரில் இளைஞர்கள் வாகனங்களில் அதி வேகமாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக வார இறுதிகளில் இறுதியில் பெரும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து மேற்கொண்டு வாகனங்களின் வேகத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், இதுபோன்ற சம்பவங்ள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X