இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் கோலி தனது 27-வது டெஸ்ட் அரை சதத்தை நிறைவு செய்துள்ளார். நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி, 8 பவுண்டரிகளை அடித்து 86 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். 


மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். 490 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23,000 ரன்களை கடந்த வீரரானார். சச்சினை பொருத்தவரை, 522 இன்னிங்ஸில் 23,000 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில், 70 சதங்கள், 111 அரை சதங்களை அடித்திருக்கிறார் கோலி. அவரது பேட்டிங் சராசரி 55-க்கும் மேல் உள்ளது. 


இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 11 ரன்கள் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. 






அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் கேப்டன் கோலி ஆகிய இருவரும் நிதனமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புஜாரா வழக்கம் போல் 4 ரன்களுக்கு ஆண்டர்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து உணவு இடைவேளை வரை இந்திய அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஜடேஜாவும் வந்த வேகத்தில் அவுட்டானார். இதனால், விராட் கோலி, ரஹானே ஆகியோர் களத்தில் இருந்தனர். விராட் கோலி 45 ரன்கள் எடுத்திருந்தபோது ரூட் கேட்சை மிஸ் செய்தார். இதே போல, கோலி மற்றும் ரஹானாவின் கேட்சுகள் மிஸ் செய்யப்பட்டதால் இடைப்பட்ட வாய்ப்பில் ரன்கள் சேர்த்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.


இந்நிலையில், கோலி அரை சதம் கடந்தபோது, இந்திய அணி 100 ரன்களை எட்டியிருந்தது. மோசமான தொடக்கத்தில் இருந்து இந்திய அணி ஓரளவு மீண்டுள்ளது. இப்போது, அரை சதம் கடந்த கோலி ஆட்டமிழந்துள்ள நிலையில் ரஹானே மற்றும் பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.