இன்னும் 3 மாதத்தில் திமுக மத்திய அரசின் திட்டங்களை புரிந்து கொண்டு தங்களை மாற்றிக்கொள்வார்கள் தூத்துக்குயில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி.



தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை தூத்துக்குடி வந்தார். அவருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் செண்டை மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கட்சி மூத்த நிர்வாகிகள் பால்சிவயாதவ், நெல்லையாளன் ஆகியோரின் வீட்டுக்கு சென்று ஆசி பெற்ற அவர், தூத்துக்குடி 2 ஆம்கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் "தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் அடிப்படியில் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்த நிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்து தான். பாஜக கட்சி அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கிறது என பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்து 10 ஆண்டுகாலம்  மத்திய அரசின் திட்டங்களை செயல்பாடுகளை கும்பகர்ணன் தூங்கி எழுந்து போல கண்மூடிக்கொண்டு எதிர்த்து வந்தனர். ஆனால் இன்று, ஆட்சிக்கு வந்தும் வேளாண் சட்டம், நீட் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கான  அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது "கோ பேக்" மோடி என சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்த திமுகவினர், இன்று அதே திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என குறிப்பிட்டு அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டிருப்பதாக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

அதுபோல கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை தமிழகத்திற்கு ஒதுக்கி மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். எனவே, முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுகவினர் மத்திய அரசை புரிந்து ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதுபோலவே, வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் திமுகவினர் 3 மாதத்தில் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முறைப்படி என்ன செய்யமுடியும் என்பதை பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். மிக வேகமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வரும் என்றார். கூட்டத்தில், மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.