இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மதியம் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. ராகுல் (127*) மற்றும் ரஹானே (1*) ஆகியோர் களத்தில் இருந்தனர்.


இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராகுல், ரஹானே அடுத்தடுத்து விக்கெட்டை இங்கிலாந்து அணி எடுத்தது. அதன்பின்னர் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா சிறிது நேரம் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும் 37 ரன்கள் எடுத்திருந்த போது ரிஷப் பண்ட் மார்க் வூட் பந்துவீச்சில் ஆட்டமிந்தார். இதைத் தொடர்ந்து வந்த முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமல் மோயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். அதைத் தொடர்ந்து வந்த இஷாந்த் சர்மா 8 ரன்களுக்கும் பும்ரா ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஜடேஜா 40 ரன்கள் எடுத்திருந்தப் போது மார்க் வூட் பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். 


 






இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 83 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சென் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா அணியுடன் தொடர்ச்சியாக ஆண்டர்சென் சிறப்பாக பந்துவீசி வருகிறார். 


2007 முதல் தற்போது வரை லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக ஆண்டர்செனின் செயல்பாடு: 


2007: 5/42 & 2/83
2011: 2/87 & 5/65
2014: 4/60 & 1/77
2018: 5/20 & 4/23
2021: 5/62*


 






மேலும் ஆண்டர்சென் லார்ட்ஸ் மைதானத்தில் 110 விக்கெட்டிற்கு மேல் எடுத்துள்ளார்.  எனவே லார்ட்ஸ் மைதானம் ஆண்டர்செனிற்கு எப்போதும் சிறப்பான மைதானமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: வழி தெரியாமல் தொலைந்தவருக்கு டாக்சி கட்டணம்.. வழிகாட்டியை கண்டுபிடித்து ஒலிம்பிக் வீரர் நெகிழ்ச்சி (வைரல் வீடியோ)