சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இருக்கும் டைடல் பார்க் போலவே தமிழ்நாட்டில்,  வேலூர், விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  .

 

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர்ப்புறங்களில் நிலவிவரும் அதிகப்படியான செலவுகளால்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெல்ல இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களை நோக்கி படை எடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும் ஐடி நிறுவனங்களின் இது போன்ற இட மாறுதல்களால் சொந்த மாவட்டங்களிலுள்ள படித்து தகுதி வாய்ந்த பல கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

 



 

கோவை மற்றும்  மதுரையில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் , அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் பல பட்டதாரிகள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று   பயன் அடைந்துள்ளனர் . 

 

இது போலவே வேலூரில் டைடல் பார்க் அமைந்தால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் இருக்கும் படித்த மாணவர்கள் வேலைத் தேடி சென்னை, பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்பதால் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் பெரிதும்  வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

இது போலவே இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்திருப்பது தோல் தொழிற்சாலை மற்றும் தோல் பொருள் உற்பத்தியில் அதிகளவில் பங்களிப்பை அளித்து வரும் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்கள் இந்த அறிவிப்பினால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

 

தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று  தாக்கல் செய்யப்பட்டது.

 


 

 

இன்றைய தினம்  நிதிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குச் செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது